ஜனாதிபதி கோட்டாபய பதவி விலகல் கடிதத்தை அனுப்பினார்!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமது பதவி விலகல் கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பியுள்ளார்.
நம்பத்தகுந்த தகவல் வட்டாரங்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளன.
பாரிய மக்கள் போராட்டத்தையடுத்த, தான் ஜூலை 13 ஆம் திகதியுடன் பதவி விலகுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த 9 ஆம் திகதி சபாநாயகருக்கு அறிவித்திருந்தார்.
இந்தநிலையில், ஜனாதிபதியின் கடிதம் நேற்றைய நாளுக்குள் கிடைக்கப்பெறுமென நம்புவதாக சபாநாயகர் நேற்றைய தினம் அறிவிப்பொன்றினூடாக தெரிவித்திருந்தார்.
இதனிடையே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, உரிய தரப்பினரின் அனுமதியுடன் அரசியலமைப்பினூடாக தனக்கு அளிக்கப்பட்டுள்ள திகாரங்களை பயன்படுத்தி, வான்படை விமானம் மூலம் மாலைதீவு பயணமானார். இதனை வான்படையும், பிரதமர் அலுவலகமும் உறுதிப்படுத்தியிருந்தன.
எவ்வாறாயினும், ஜனாதிபதி, மாலைதீவிலிருந்து நேற்றிரவு சிங்கப்பூர் பயணமாகவுள்ளதாகவும், அவர் சிங்கப்பூரை அடைந்த பின்னரே பதவி விலகல் கடிதம் கிடைக்கப்பெறும் என்றும் சபாநாயகர் நேற்றைய அவசர கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் அறிவித்தார் என தகவல் வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த நிலையில், தான் விலகுவதாக உறுதியளித்த, தினம் கடந்த நிலையில் ஜனாதிபதியிடமிருந்து பதவி விலகல் கடிதம் கிடைக்கவில்லையென சபாநாயகர் இன்று காலை அறிவித்தார்.
இது இவ்வாறிருக்கையில், ஜனாதிபதிக்குரிய கடமைகளை தன்னால் ஆற்ற முடியாமல் இருப்பதால், பதில் கடமைகளுக்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நியமித்து ஜனாதிபதி நேற்று அதிவிசேட வர்த்தமானியொன்றை வெளியிட்டிருந்தார்.
எவ்வாறாயினும், சவூதி அரேபியாவின் சவூதியா ஏர்லைன்ஸ் விமானம் மூலம் இன்று மாலை சிங்கப்பூரை சென்றடைந்தார். அவர் அந்நாட்டை சென்றடைந்த சில மணித்தியாலங்களில் சபாநாயகருக்கு தமது பதவி விலகல் கடிதத்தை அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.