நாட்டுக்கு மஹிந்த ராஜபக்ஷவின் சேவை கட்டாயம் தேவை – அமைச்சர் அமரவீர
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டைக் கட்டியெழுப்பும் பயணத்துக்கு பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அனுபவங்கள் அவசியமாகுமென விவசாய மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
விக்கிரமசிங்க, நாட்டின் அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்பைபெற்றுக் கொண்டு செயற்பட்டு வருவதாக தெரிவித்துள்ள அமைச்சர், அக்கட்சிகளிலுள்ள சிரேஷ்ட மற்றும் அனுபவம் மிக்கவர்களின் ஒத்துழைப்புக்களையும் பெற்றுக் கொள்வது அவசியமென்றும்தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளிலுமுள்ள அனுபவம் படைத்தவர்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொடுத்து நாட்டை முன்னேற்றும் வேலைத்திட்டத்துக்கு பங்களிப்பு செய்வது முக்கியமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய தேவை ஆட்சியைக் கவிழ்த்து நாட்டை சீரழித்து அதன் மூலம் ஆட்சியைக் கைப்பற்றுவதல்ல என்பதை சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் சர்வகட்சி அரசாங்கத்தில் இணைந்து நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தைப் பலப்படுத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.