தேசபந்து தென்னகோன் மீதான விசாரணை முடிவடைந்துள்ளதாக நீதிமன்றில் அறிவிப்பு !
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீதான விசாரணை முடிவடைந்துள்ளதாக நீதிமன்றில் சி.ஐ.டி அறிவித்துள்ளது.
கடந்த மே மாதம் 9ஆம் திகதி காலி முகத்திடல் போராட்டத்தின் மீதான தாக்குதல் தொடர்பான விசாரணையின் முன்னேற்றம் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி எதிர்வரும் 24 ஆம் திகதி அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் விசாரணை இன்று இடம்பெற்ற போது பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குற்றப் புலனாய்வு திணைக்களம் சார்பாக முன்னிலையானார்.
தேசபந்து தென்னகோனிடம் நடத்தப்பட்ட விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும் இந்த விசாரணைகளில் பெயர்கள் குறிப்பிடப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்டு சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.
இருப்பினும் அவர் தொடர்பான இந்த உண்மைகள் மட்டும் போதாது எனவும் விசாரணைகளை அடுத்து மேலதிக சாட்சியங்களையும் ஆராய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
தேசபந்து தென்னகோனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபர் மூன்று தடவைகள் பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளார் என நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
இருப்பினும் தற்போதுவரை சட்டமா அதிபர் வழங்கிய அறிவுறுத்தல்களை நடைமுறைப்படுத்தாமை தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டமா அதிபருக்கு நீதவான் உத்தரவிட்டார்.
இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த, மொரட்டுவை நகர சபை மேயர் சமன்லால் பெர்னாண்டோ உள்ளிட்ட சந்தேகநபர்கள் ஐவரின் கைத்தொலைபேசிகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.