அமைச்சுப்பதவிக்கான போட்டி சூடுபிடிக்கிறது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்கும் தீவிர முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், அடுத்த வாரத்தில் அதற்கான சாதகமான தீர்மானங்கள் எட்டப்படுமென ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்தது.

இந்நிலையில் தற்போதைய அமைச்சரவையை மேலும் விஸ்தரிப்பது குறித்து ஜனாதிபதி  தீவிரமாக ஆராய்ந்து  வருவதாகவும்,  ஒரு சிலர் அமைச்சுப்பதவிகளை பெற்றுக்கொள்ள தீவிர ஆர்வம் காட்டி வருவதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது.

சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது குறித்து கடந்த சில தினங்களாக பல கட்சிகளுடனும் ஜனாதிபதி முன்னெடுக்கும் பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடிவடைந்துள்ளதாக ஐ.தே.க தெரிவிக்கின்றது. சர்வகட்சி அரசாங்கத்தில் இணைந்து செயற்பட கட்சிகள் பலவும் இணக்கம் தெரிவித்துள்ளதுடன், எதிர்க்கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் சிலரும் சர்வகட்சி அரசாங்கத்தில் இணைந்துகொள்ள தீர்மானித்துள்ளதாகவும் அக்கட்சியின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

எனினும், சர்வகட்சி அரசாங்கம் அமையப்பெறும் போது அமைச்சரவை எண்ணிக்கை அதிகரிக்க வேண்டியுள்ளதால் தற்போது புதிதாக ஏழு அமைச்சர்களுக்கான அமைச்சுப்பதவிகள் தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

இந்த ஏழு அமைச்சுகளில் முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதி ஒருவருக்கும், மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.பி ஒருவருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள்  இருவருக்கும் அமைச்சுப்பதவிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதேபோல் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் இருவரும்,  ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணிக் கட்சியாக செயற்படும் எம்.பி ஒருவருக்கும் அமைச்சுப்பதவிகளை எடுத்துக்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் நேரடியாக கோரிக்கை விடுத்துள்ளார். அது குறித்து சாதகமான பதிலை அவர்கள் வழங்கியுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

எவ்வாறு இருப்பினும் சர்வகட்சி அரசாங்கத்தில் இணைந்துகொள்ளும் சகலருக்கும் அமைச்சுப்பதவிகளை பெற்றுக்கொடுக்க முடியாதுள்ள நிலையில் அவர்களுக்கு வேறு சலுகைகளை பெற்றுக்கொடுக்கவும் ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதியுடன் நெருக்கமான பணியாற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் உறுதிப்படுத்தினார்.