மியான்மர் தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் ஆங் சாங் சூ கியூ வெற்றி

மியான்மர் தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் ஆங் சாங் சூ கியூ வெற்றி

மியான்மர் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில், எதிர்க்கட்சி தலைவர் ஆங் சாங் சூ கியூ-வின் என்.எல்.டி. கட்சி மாபெரும் வெற்றி பெறும் நிலையில் உள்ளது.

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்று மியான்மர். முன்பு பர்மா என அழைக்கப்பட்ட மியான்மரில் ஏறத்தாழ 50 ஆண்டு காலமாக ராணுவ ஆட்சிதான் நடைபெற்று வந்திருக்கிறது. கடந்த 2011-ம் ஆண்டு முதல் யு.எஸ்.டி.பி. என்னும் ஐக்கிய சகோதரத்துவ மேம்பாட்டுக் கட்சியின் ஆட்சி நடைபெற்றாலும், ராணுவத்தின் ஆதரவுடன்தான் ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் மியான்மரில் பாராளுமன்ற தேர்தல் நேற்று நடந்தது. இந்த தேர்தல் உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் கடந்த 1990-ம் ஆண்டு தேர்தல் நடந்தபோது தற்போதைய எதிர்க்கட்சியான சூ கியின் என்.எல்.டி. என்னும் தேசிய ஜனநாயக லீக் கட்சி வெற்றி பெற்றது. ஆனால் ராணுவம் அந்த வெற்றியை ஏற்கவில்லை. அத்துடன் சூ கியை 20 ஆண்டு காலம் வீட்டுச்சிறையில் வைத்து விட்டது.

664 இடங்களை கொண்ட பாராளுமன்றத்துக்கு நடைபெறும் தேர்தலில் ராணுவத்தின் ஆதரவு பெற்ற ஆளும் யு.டி.எஸ்.பி. கட்சிக்கும், எதிர்க்கட்சி தலைவர் ஆங் சாங் சூ கியூ-வின் என்.எல்.டி. கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இவர்களுடன் 90 கட்சிகளை சேர்ந்த 6 ஆயிரம் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்

இந்த தேர்தலில் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று ஓட்டு போட்டனர். ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக இருந்தது. நேற்று மாலை 4 மணியளவில் வாக்குப்பதிவு முடிவடைந்தது. தேர்தல் முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், இன்று காலையில் இருந்து அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

தற்போதைய நிலவரப்படி ஆங் சாய் சூயி கட்சி வெற்றி முகத்தி்ல் உள்ளது. என்.எல்.டி. கட்சி சுமார் 80 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. ஆளும் கட்சியான ஐக்கிய சகோதரத்துவ மேம்பாட்டுக் கட்சி (யு.எஸ்.டி.பி.) தோல்வியை தழுவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலை 4 மணியளவில் பெருவாரியான முடிவுகள் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் கூறுகின்றன.

முன்னதாக, ஆங் சான் சூகி மேற்கொண்ட சூறாவளி பிரச்சாரத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.