இஸ்லாம் பாட ஆசிரிய பயிலுநர் தெரிவும் அட்டாளைச்சேனை கல்விக்கல்லூரியும்..!

இஸ்லாம் பாட ஆசிரிய பயிலுநர் தெரிவும் அட்டாளைச்சேனை கல்விக்கல்லூரியும்..!

இஸ்லாம் பாட ஆசிரியர் நியமனமானது இரண்டு அடிப்படையில் இலங்கையில் நடைபெற்று வந்தன. ஒன்று மௌலவி ஆசிரியர் நியமனம் மற்றையது கல்விக் கல்லூரி மூலம் நியமனம்

இதில் மௌலவி ஆசிரியர் நியமனமானது கடந்த 2010 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை வழங்கப்படவில்லை.
சுமார் 12 ஆண்டுகளாக இந்நியமனம் வழங்கப்படாத நிலையில் கடந்த 2019/ 2020 ஆம் ஆண்டு கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான கல்வி கல்லூரிக்கான தெரிவில் வழமையாக வழங்கப்பட்ட பயலுநர்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு க. பொ.த (உ/த) பரீட்சை எழுதிய மாணவர்களை கல்வி கல்லூரிக்கு தெரிவு செய்யும்போது தமிழ் மொழி மூலம் சைவ சமயத்துக்கு 20 மாணவர்களும் கத்தோலிக்கம்/ கிறிஸ்தவம் சமயத்துக்கு 20 மாணவர்களும் (சிங்கள மொழி மூலம் 20)
இஸ்லாம் பாடத்துக்கு 20 மாணவர்களும் உள்வாங்கப்பட்டனர் (வர்த்தமானி 2019.1.25)

2017 ஆம் ஆண்டு க. பொ.த (உ/த) பரீட்சை எழுதிய மாணவர்களை கல்வி கல்லூரிக்கு தெரிவு செய்யும்போது தமிழ் மொழி மூலம் சைவ சமயத்துக்கு 20 மாணவர்களும் கத்தோலிக்கம்/ கிறிஸ்தவம் சமயத்துக்கு 20 மாணவர்களும் (சிங்கள மொழி மூலம் 20)
இஸ்லாம் பாடத்துக்கு 20 மாணவர்களும் உள்வாங்கப்பட்டனர் (வர்த்தமானி 2019.1.25)

2018 ஆம் ஆண்டு க. பொ.த (உ/த) பரீட்சை எழுதிய மாணவர்களை கல்வி கல்லூரிக்கு தெரிவு செய்யும்போது தமிழ் மொழி மூலம் சைவ சமயத்துக்கு 30 மாணவர்களும் கத்தோலிக்கம்/ கிறிஸ்தவம் சமயத்துக்கு 30 மாணவர்களும் (சிங்கள மொழி மூலம் 35)
இஸ்லாம் பாடத்துக்கு 30 மாணவர்களும் உள்வாங்கப்பட்டனர் (வர்த்தமானி 2020.9.4)

ஆனால் 2019 ஆம் ஆண்டு க. பொ.த (உ/த) பரீட்சை எழுதிய மாணவர்களை புதிய பாடத்திட்டம் மற்றும் பழைய பாடத்திட்டம் என்ற அடிப்படையில் கல்வி கல்லூரிக்கு தெரிவு செய்வதற்கான நேர்முகப் பரீட்சை தற்போது நடைபெற்று வருகின்றது. இதில் தமிழ் மற்றும் சிங்கள மொழி அடிப்படையில் கத்தோலிக்க கிறிஸ்தவ சமயத்துக்கு 20 மாணவர்களும் தமிழ் மொழி மூலம் சைவ சமயத்துக்கு 20 மாணவர்களும் இஸ்லாம் பாடத்துக்கு 10 மாணவர்களும் உள்வாங்கப்படவுள்ளனர் (வர்த்தமானி 2022.7.22 )

அத்தோடு 2020 ஆம் ஆண்டு க. பொ.த (உ/த) பரீட்சை எழுதிய மாணவர்களை புதிய பாடத்திட்டம் என்ற அடிப்படையில் கல்வி கல்லூரிக்கு தெரிவு செய்வதற்கான நேர்முகப் பரீட்சை தற்போது நடைபெற்று வருகின்றது. இதில் தமிழ் மற்றும் சிங்கள மொழி அடிப்படையில் கத்தோலிக்க கிறிஸ்தவ சமயத்துக்கு 20 மாணவர்களும் தமிழ் மொழி மூலம் சைவ சமயத்துக்கு 20 மாணவர்களும் இஸ்லாம் பாடத்துக்கு 10 மாணவர்களும் உள்வாங்கப்படவுள்ளனர் (வர்த்தமானி 2022.7.22)

இவ்வாறு கடந்த பல வருட காலமாக சம அளவில் வழங்கப்பட்ட வெற்றிடமானது திடீரென குறைக்கப்பட்டுள்ளமை பெறும் அதிர்ச்சியும் கவலையும் ஏற்படுத்தி உள்ளது.

சுமார் ஆயிரம் முஸ்லிம் பாடசாலையில் காணப்படும் இந்நாட்டில் 10 பேர் ஒரு வருடத்திற்கு இஸ்லாம் பாட ஆசிரியர் பயிலுநராக முழு இலங்கைக்கும் தெரிவு செய்வது இஸ்லாம் பாடத்தில் பாரிய தாக்கம் செலுத்தும் என்பது தெளிவான விடயமாகும்.

மேலும் பல்வேறு இஸ்லாம் பாட ஆசிரியர்கள் ஓய்வு பெற்று சென்றுள்ள நிலையிலும் மௌலவி ஆசிரியர் நியமனம் இல்லாதபோதும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படும் இந்நிலையிலும் இவ்வாறு இஸ்லாம் பாட பயிலுநர்களை குறைத்துள்ளமை மிகுந்த கவலையை தருகின்றது.

School census கணக்கின்படி 2018ல் 434560 முஸ்லிம் மாணவர்களும் 2019-ல் 425153 முஸ்லிம் மாணவர்களும் 2020ல் 429160 முஸ்லிம் மாணவர்களும் உள்ளனர்.

அத்தோடு தேசிய மட்ட க.பொ.த (சா/த) பரீட்சையிலும் நான்கு சமய பாடங்களில் மிகக் குறைந்த சித்திவீதம் இஸ்லாம் பாடத்திலேயே காணப்படுகின்றது. தகுதியான பயிற்றப்பட்ட இஸ்லாம் பாட ஆசிரியர்களின் இன்மையும் இஸ்லாம் பாடத்தை கற்பிக்க போதிய ஆசிரியர்கள் இன்மையும் பிரதான காரணங்களாகும்.

இன்று முழு இலங்கையும் பாரிய ஒழுக்க சீர்கேட்டுக்கும் பண்பாட்டு வீழ்ச்சிக்கும் போதை பொருள் பாவனைக்கும் அடிமை பட்டுள்ள நிலையில் முஸ்லிம் மாணவர்களுக்கு சமய பாடத்தை கற்பிக்க அதிக ஆசிரியர்கள் தேவையாக உள்ளனர். இதனை கருத்தில் கொண்டு கல்விக்கல்லூரிக்கான இஸ்லாம் பாட ஆசிரியர் பயலுநர்களின் எண்ணிக்கையில் மாற்றம் செய்ய வேண்டும் என பணிவாக வேண்டுகின்றேன்.

ஆகவே 2018 ம் ஆண்டு உள்வாங்கப்பட்டது போன்று ஒரு வருடத்திற்கு 30 பயிலுநர் என்ற அடிப்படையில் குறித்த எண்ணிக்கையில் மாற்றம் செய்யுமாறு மிக தாழ்மையாக வேண்டுகின்றேன்.

முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களே!

*பாராளுமன்ற உறுப்பினர்களே !

சமூக தலைவர்களே!*

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையே!

இவ்விடயத்தில் கவனம் கொண்டு அவசரமாக தீர்வை பெற்று தருமாறு வேண்டுகின்றேன்


  • A.J.M.Ashraff (Falahi)