நாட்டின் பொருளாதாரத்தை ஐ.தே.க.வினால் மாத்திரமே கட்டியெழுப்ப முடியும் – ருவன் விஜேவர்த்தன
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கோட்டாபய ராஜபக்சவின் பிழையான தீர்மானங்களும் அவருக்கு வழங்கிய தவறான ஆலாேசனைகளே நாடு வங்குராேத்து அடைய காரணமாகும்.
அதனால் வங்குரோத்து அடைந்துள்ள நாட்டை ஐக்கிய தேசிய கட்சியால் மாத்திரமே கட்டியெழுப்ப முடியும். அதற்கான வேலைத்திட்டங்களும் எங்களிடம் இருக்கின்றன என ஐக்கிய தேசிய கட்சியின் உபதலைவர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சி இளைஞர் படையணி அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று முன்தினம் கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்றது இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
கோட்டபாய ராஜபக்ஷ அரசாங்கத்தின் பிழையான தீர்மானங்களால் நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வங்குராேத்து நிலைக்கு தள்ளப்பட்டிருந்தது.
இதற்கு கோட்டபாய ராஜபக்ஷவுக்கு பிழையாக ஆலாேசனை வழங்கியமையும் காரணமாகும். இதனால் மக்கள் பாரிய பொருளாதார நெருக்கடி மற்றும் பொருட்களின் விலை அதிகரிப்பினால் பல்வேறு கஷ்டங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதனால் நாட்டில் இளைஞர்கள் வீதிக்கிறங்கி அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களை மேற்கொள்ள ஆரம்பித்தனர். அரசியல் தொடர்பாக அவர்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போனது. தற்போது அவர்களின் எதிர்காலம் இல்லாமல் போகும் என நினைத்து நாட்டை விட்டு வெளியேறிச் செல்ல முற்படுகின்றனர்.
பொருளாதார பிரச்சினையே இதற்கு காரணமாகும். வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை அப்போதைய அரசாங்கத்தினால் கட்டியெழுப்ப முடியாத நிலையை உணர்ந்தே கோட்டபாய ராஜபக்ஷ தனது பிரதமரை பதவி விலகச்செய்து,நாட்டை பொறுப்பேற்குமாறு எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
ஆனால் யாரும் முன்வராத நிலையில், ரணில் விக்ரமசிங்க தனது எதிர்கால அரசியல் தொடர்பில் சிந்திக்காமல் பிரதமர் பதவியை பொறுப்பேற்றார்.
ரணில் விக்ரமசிங்க பதவியேற்று 2வாரங்களில் எரிபொருள் வரிசையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்தார். எனினும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அவரது வீட்டையும் எரித்தனர். இதனால் ரணில் விக்ரமசிங்கவுக்கு 3 காட்சட்டைகளும் 2 சேட்களுமே எஞ்சியிருந்தன. மற்ற அனைத்தும் எரிந்து சாம்பலாகின.
என்றாலும் ரணில் விக்ரமசிங்க நாட்டின் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுத்து வருகிறார். அவரின் தூரநோக்கு மற்றும் சர்வதேச நாடுகளுடனான தொடர்பு போன்ற காரணத்தினாலே சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை விரைவாக பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க முடிந்தது.
இந்த மாத இறுதியில் சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் கைச்சாத்தாகும் என எதிர்பார்கிறோம். அரசியலில் நம்பிக்கை இழந்திருக்கும் இளைஞர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கே ஜனாதிபதி நடவடிக்கை எடுத்து வருகிறார்.
கடந்த காலங்கள் நாட்டில் இடம்பெற்றுவந்த யுத்தம் காரணமாக நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாமல் இருந்தது. ஆனால் தற்போது அவ்வாறான சூழல் நாட்டில் இல்லை. அதனால் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முயற்சித்து வருகிறார்.
இளைஞர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் பல வேலைத்திட்டங்களை அவர் முன்னெடுக்க இருக்கிறார். அதனால் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுகப்பும் ரணில் விக்ரமசிங்கவின் முயற்சிகளுக்கு பலம் கொடுக்க இளைஞர்கள் முன்வரவேண்டும்.
அத்துடன் வங்குராேத்து அடைந்திருக்கும் இந்த நாட்டை ஐக்கிய தேசிய கட்சியினால் மாத்திரமே கட்டியெழுப்ப முடியும். அதற்கான வேலைத்திட்டங்களும் எம்மிடம் இருக்கின்றன என்றார்.