நீதிமன்றத்தில் சரணடைந்தார் விமல் வீரவன்ச
வழக்கு ஒன்றுக்கு ஆஜராகத் தவறியமைக்காக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (14) மீளப்பெற்றுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச நீதிமன்றில் முன்னிலையாகி பிரேரணையை முன்வைத்ததையடுத்து நீதிமன்றம் பிடியாணையை மீளப்பெற்றுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் 6 பேருக்கு எதிராக கறுவாத்தோட்ட பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு, கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் முன்னிலையில் திங்கட்கிழமை (13) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த கைது பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
2016ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் செயிட் அல் ஹுசைன் இலங்கைக்கு விஜயம் செய்த போது, கொழும்பு, தும்முல்லையில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை வளாகத்தைச் சுற்றியுள்ள வீதிகளை மறித்து பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, வீரகுமார திஸாநாயக்க, பியசிறி திஸாநாயக்க, மொஹமட் முஸம்மில், ஜயந்த சமரவீர மற்றும் ரொஜர் செனவிரத்ன உள்ளிட்ட 7 பேர் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.