நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமிற்கு ரூ.7.5 மில்லியன் அபராதம்..!
சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட தங்கம் மற்றும் ஸ்மார்ட் போன்களுடன் சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் 7.5 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பொருட்களை பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமினால் சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட தங்கத்தின் பெறுமதி 74 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
அவர் 91 கையடக்க தொலைபேசிகளையும் கொண்டு வந்துள்ளதாகவும், அந்த தொலைபேசிகளின் பெறுமதி 4.2 மில்லியன் ரூபா எனவும் இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் இலங்கைக்கு கொண்டு வந்த சட்டவிரோத பொருட்களின் மொத்த பெறுமதி 78.2 மில்லியன் ரூபா என குறிப்பிடப்பட்டுள்ளது.
துபாயிலிருந்து ஃப்ளை டுபாய் விமானத்தில் நேற்று (23) காலை இலங்கை வந்த போது, குறித்த எம்.பி., இலங்கை சுங்கத்தின் வருவாய் கண்காணிப்பு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.