‘முதன்முறையாக நாட்டின் தலைவர் “தமிழ் – பெளத்த வரலாற்றை” பகிரங்கமாக ஏற்றுக்கொண்டுள்ளார்’ – மனோ!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –
முதன்முறையாக நாட்டின் தலைவர் “தமிழ் பெளத்த வரலாற்றை” பகிரங்கமாக ஏற்றுக்கொண்டுள்ளார்.
இலங்கை தீவின் வரலாற்றில் தமிழ் பெளத்த வரலாற்றுக்கு உரிய இடத்தை ஏற்றால், அது இன்று நாம் எதிர்கொள்ளும் அநேக பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் சாவியாகும்.
ஒன்றரை மாதங்களுக்கு முன் ரணிலை சந்தித்து உரையாடிய போது எமது உரையாடலில் தமிழ் பெளத்தம் இடம்பெற்றது.
இப்படி ஒரு வரலாறு இருப்பதை சிங்கள தீவிரர்கள் எப்போதும் மறைக்க விரும்புகிறார்கள்.
வெறும் கைகளால் சூரியனை மறைப்பதை போன்று…
விஜய இளவரசன் வந்து இறங்கிய கதை பொய்யென்று என்னை தேடிவந்து ஞானசாரர் சொன்னது போன்று…
விஜயன் வரவை நினைவுகூர்ந்து முத்திரை வெளியிட்டு விட்டு பின்னர், அஞ்சல் திணைக்களம் அதை வாபஸ் பெற்றதை போன்று…
2018ம் வருடம் அமைச்சராக இருந்த போது, ஒரு காரியம் செய்தேன்.
பேராசிரியர் சுனில் ஆரியரத்ன, (Sunil Ariyaratne – සුනිල් ආරියරත්න) இலங்கையின் தமிழ் பெளத்த வரலாற்றை பற்றி சான்றுகளுடன் எழுதிய, “தமிழ் பெளத்தன்” (தமிழ பெளத்தயா) என்ற சிங்கள நூல் நாட்டில் பாவனையில் இல்லாமல் இருந்தது.
அந்த நூலை தேடி பிடித்து, அவருடன் கஷ்டப்பட்டு, பேசி, அனுமதி பெற்று (எனது செயலாளர் பிரியாணியின் பல்கலைக்கழக பேராசிரியர், அவர்!) அதை அமைச்சின் செலவில் (ஒரு பத்தாயிரம் பிரதிகள்) மறுபிரசுரம் செய்து, சிங்கள பாடசாலைகளுக்கும், விகாரைகளுக்கும் இலவசமாக அனுப்பி வைத்தேன்.
அமைச்சில் சில சிங்கள அதிகாரிகள் முகத்தை சுழித்தார்கள். பிரசுர பணிகளை தாமதப்படுத்தினார்கள்.
அதன் பின் சில ஆஆஆ…மதுருக்கள், சுனில் ஆரியரத்னவை தொலைபேசியில் அழைத்து கிழித்துள்ளார்கள்..!
என்னையாரும் கிழிக்கவில்லை. இப்போது ரணிலை கிழிப்பார்களோ தெரியவில்லை. அவரை கெளதம புத்தனும், கதிர்காம கந்தனும் காப்பாற்றட்டும்.
மனோ கணேசன் MP