ரோயல் பார்க் படுகொலை – ஜூட் சமந்தவை மன்னிக்குமாறு தேரர்கள், பாதிரியார், எம்.பிக்கள் மைத்திரியிடம் கெஞ்சினர்!

ரோயல் பார்க் படுகொலை – ஜூட் சமந்தவை மன்னிக்குமாறு தேரர்கள், பாதிரியார், எம்.பிக்கள் மைத்திரியிடம் கெஞ்சினர்!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  

ரோயல் பார்க்கில் யுவதியொருவரை படுகொலைச் செய்த சம்பவத்தில் குற்றவாளியாக இனங்காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஜூட் ஷிரமந்தவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குமாறு பல தரப்பினரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கெஞ்சியுள்ளனர்.

தேரர்கள், பாதிரியார் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களே இவ்வாறு கெஞ்சியுள்ளனர் என்று உயர்நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.

மரண தண்டனை கைதியான ஜூட் ஷிரமந்தவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை ஆராய்ந்த போதே, மேற்படி விவகாரம் உயர்நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.

இதன்போது, ஜூட் ஷிரமந்தவுக்கு பொதுமன்னிப்பு வ​ழங்குவதற்கு, தண்டனை விதித்த மேல் நீதிமன்ற நீதிபதி மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசரின் அறிக்கையை கோரவேண்டும் என்று உயர்நீதிமன்றத்தின் நீதியரசர் யசந்த கோதாகொட மன்றுக்கு அறிவித்தார்.

இந்த மனு, நீதியரசர்களான எஸ்.துரைராஜா, யசந்த கோதாகொட மற்றும் ஜகத் டி சில்வா ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் ஆராயப்பட்டது.

ஜூட் ஷிரமந்தவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியமைக்கு எதிராக பெண்கள் ஒன்றிய அமைப்பு, உயர்நீதிமன்றத்தில் இந்த அடிப்படை உரிமை மனுவைத் தாக்கல் செய்திருந்தது.

அந்த மனுவில், பிரதிவாதிகளாக சட்டமா அதிபர் உள்ளிட்ட இன்னும் சிலரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்த மனு, உயர்நீதிமன்றத்தின் நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் திங்கட்கிழமை (12) ஆராய்ந்தபோது,

மனுதாரர் சார்பில் ஆஜராகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜீவ ஜயவர்தன,

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உதவி செயலாளர், சட்டமா அதிபருக்கு அனுப்பிவைத்திருந்த கடிதத்தையும் கையளித்தார். அந்தக் கடிதத்தின் அடிப்படையில் ஜூட் ஷிரமந்தவுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டுமென வாய்மொழியூடாக கோரியிருந்தவர்களின் பெயர் பட்டியலும் இருந்தது.

அந்த பட்டியலில், ஜூட் ஷிரமந்தவின் தாயார் எஸ்.எம். ஜயமஹா, அத்துரலிய ரத்ன தேரர், பலாங்கொட புத்தசோச தேரர், கத்தோலிக்க பாதிரியார் விக்ரமசிங்ஹ, பத்தேகம சமித்த தேரர், மகேஷ் மடவல மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் கோங்காகே, மற்றும் நாலனி ஆகியோரின் பெயர்களே இருந்தன