ஜனாதிபதியின் வேலைத்திட்டத்திற்கு பொஹொட்டுவ தொடர்ந்தும் ஆதரவு – பசில் ராஜபக்ஷ..!

ஜனாதிபதியின் வேலைத்திட்டத்திற்கு பொஹொட்டுவ தொடர்ந்தும் ஆதரவு – பசில் ராஜபக்ஷ..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  
நாட்டின் அபிவிருத்திக்கான ஜனாதிபதியின் வேலைத்திட்டத்திற்கு தொடர்ந்தும் ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இணக்கம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் நேற்று (14) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

பிரதமர் தினேஷ் குணவர்தன, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ, பொதுச் செயலாளர் சாகர காரியவசம், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அமைச்சர் ஜீவன் தொண்டமான், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் ஆகியோர் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு தெரியாமல் அரசாங்க நிகழ்ச்சிகளுக்கு தமது உறுப்பினர்களை அழைப்பது பொருத்தமற்றது என அக்கட்சியின் தலைவர்கள் அங்கு சுட்டிக்காட்டியுள்ளனர்.

அண்மையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்காமல் மாவட்ட அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கான விசேட கூட்டத்திற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாவட்ட தலைவர்களின் பிரதிநிதிகளை ஜனாதிபதி அழைத்திருந்தார்.

எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் பெருமளவான பாராளுமன்ற உறுப்பினர்கள் அந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவம் தொடர்பில் நேற்றைய கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் ஜனாதிபதியுடன் நீண்ட நேரம் கலந்துரையாடியுள்ளனர்.

இதன்படி இனிமேல் அரசாங்கத்தின் எந்தவொரு வேலைத்திட்டத்திற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களை அழைத்தால் அதனை முதலில் கட்சிக்கு தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதியுடன் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்திற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவை தொடர்ந்தும் வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதுடன், சகல பிரச்சினைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்கள் ஒவ்வொரு மாதமும் ஜனாதிபதியுடன் சந்திப்பொன்றை நடத்துவதற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.