ஞானசார தேரருக்கு எதிராக, முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நீதிமன்றில் சாட்சியம் அளிப்பு..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –
(எம்.எப்.அய்னா)
இனங்களுக்கு இடையே, நல்லிணக்கத்தை பாதிக்கும் விதமாக கருத்து வெளியிட்டமை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள, பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக, முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இன்று சாட்சியமளித்துள்ளார்.
அரச தரப்பு சாட்சியாளராக அவர் கொழும்பு மேல் நீதிமன்றில் சாட்சியம் அளித்ததுடன் அதற்கான அறிவித்தல் அவருக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் சாட்சி விசாரணைகள் கடந்த 2022 செப்டம்பர் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில், ஏற்கனவே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் அசாத் சாலி ஆகியோர் சாட்சியம் அளித்துள்ளனர்.
இந் நிலையிலேயே இது குறித்த எச்.சி.1948/20 எனும் வழக்கு (15) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்திகே முன்னிலையில் விசாரணைக்கு வரவுள்ளது.
2016 நவம்பர் மாதம் முதலாம் திகதிக்கும் 16 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில், கொழும்பு – கிருலப்பனையில் ஊடக சந்திப்பொன்றினை நடாத்தி, நல்லிணக்கத்தை பாதிக்கும் விதமான வெறுப்பூட்டும் கருத்துக்களை வெளியிட்டதாக ஞானசார தேரர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தண்டனை சட்டக் கோவையின் 291(அ) பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் ஒன்றினை அவர் புரிந்ததாக சட்ட மா அதிபரால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க பலாங்கொடை ஜெய்லானி பள்ளிவாசல் விவகாரம் குறித்து ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடும் போது, கூரகல பெளத்த புராதன சின்னங்களை முஸ்லிம்கள் ஆக்கிரமிப்பதாகவும், கேவலமான வசனங்களைக் கொண்டு இஸ்லாமியர்கள் ஏக இறைவனாக வழிபடும் அல்லாஹ்வை தூற்றும் விதமாக கருத்து வெளியிட்டு, மத உணர்வுகளை தூண்டியதாகவும் ஞானசார தேரருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், ரிஷாத் பதியுதீன் ஆகியோர் பொலிஸில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய இடம்பெற்ற விசாரணைகளை மையப்படுத்தி, மேல் நீதிமன்றில் ஞானசார தேரருக்கு எதிராக சட்ட மா அதிபரால் இந்த குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு அது கையளிக்கப்பட்டுள்ள நிலையிலேயே அவ்வழக்கு விசாரணைக்கு வந்திருந்தது. இதன்போது கலகொட அத்தே ஞானசார தேரர் சார்பில் சட்டத்தரணி சஞ்சய ஆரியதாச ஆஜராவதுடன், பாதிக்கப்பட்ட தரப்பினருக்காக சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் தலைமையிலான குழுவினர் ஆஜராவது குறிப்பிடத்தக்கது.