விரைவில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவோம்! தேர்தலை விரைவாக நடாத்துங்கள் – நாமல்..!

விரைவில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவோம்! தேர்தலை விரைவாக நடாத்துங்கள் – நாமல்..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  
“அரசியல் ரீதியில் நாங்கள் எடுத்த தீர்மானம் சிறந்தது என்பதை மக்கள் தற்போது விளங்கிக் கொண்டுள்ளார்கள். வெகுவிரைவில் புதிய அணியாக ஆட்சியைப் பொறுப்பேற்போம். ஆகவே, தேர்தலை விரைவாக நடத்துமாறு அரசிடம் வலியுறுத்துகின்றோம்” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், “ராஜபக்சக்கள் மீது போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அரசியல் இலாபம் அடைவதை ஒரு தரப்பினர் பிரதான அரசியல் கொள்கையாகக் கொண்டுள்ளனர்.

2015ஆம் ஆண்டு காலப்பகுதியிலும் பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். எனினும், அவை எதுவும் நிரூபிக்கப்படவில்லை.

2019இல் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான பழியை ராஜபக்சக்கள் மீது சுமத்துவதற்கு ஒரு தரப்பு முயற்சிக்கின்றது.

எனவே, இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பிலான விசாரணையை விரைவுபடுத்தி உண்மை அம்பலப்படுத்தப்பட வேண்டும். ராஜபக்சக்கள் நாட்டை அழித்து ஆட்சிக்கு வரவில்லை.

மாறாக நாட்டைப் பாதுகாக்கவே வந்தனர். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசு எடுத்த ஒருசில தீர்மானங்களால் பொருளாதாரப் பாதிப்பு தீவிரமடைந்தது என்பதை ஏற்றுக்கொள்கின்றோம்.

பொருளாதாரப் பாதிப்பை அரசுக்குள் இருந்தவர்கள் அரசியல் நெருக்கடியாக்கினார்கள். ஜனநாயகப் போராட்டம் என்று குறிப்பிட்டுக்கொண்டு முன்னெடுக்கப்பட்ட பயங்கரவாதச் செயற்பாட்டை அழிப்பதற்காகவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தினோம்.

கடந்த வருடம் அரசியல் ரீதியில் நாங்கள் எடுத்த தீர்மானம் சிறந்தது என்பதை மக்கள் தற்போது விளங்கிக் கொண்டுள்ளார்கள்.

வெகுவிரைவில் புதிய அணியாக ஆட்சியை பொறுப்பேற்போம். ஆகவே, தேர்தலை விரைவாக நடத்துமாறு அரசிடம் வலியுறுத்துகின்றோம்” என தெரிவித்துள்ளார்.