பெண் காதிகள் நியமனம் தொடர்பாக மு.கா தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு மீண்டும் பதில் வழங்கிய ACJU..!

பெண் காதிகள் நியமனம் தொடர்பாக மு.கா தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு மீண்டும் பதில் வழங்கிய ACJU..!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்துல்லாஹி வபரகாத்துஹு

துல்ஹிஜ்ஜா மாதத்தின் முதல் பத்துடைய அனைத்து நற்பாக்கியங்களையும் அல்லாஹ் நம்மனைவருக்கும் தந்தருள்வானாக.


பெண்களை காதிகளாக நியமிப்பது தொடர்பில் ஜம்இய்யாவின் நிலைப்பாடு பற்றி முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய ரவூப் ஹக்கீம் அவர்கள் வெளியிட்ட காணொளிக்குத் தெளிவுகோரி ஜம்இய்யா கடிதமொன்றை அவருக்கு அனுப்பி வைத்திருந்தது. அதனைக் கவனத்திற்கொண்டு கடந்த 19.06.2023 ஆம் திகதியன்று ‘ஷோர்ட் நிவ்ஸ்’ எனும் யூடியூப் தளம் ஊடாக மற்றொரு நேர்காணலை அவர் வழங்கியிருந்தார்.

அந்த நேர்காணலில் ‘ஜம்இய்யா மார்க்க விவகாரங்களுக்கான உச்ச ஸ்தாபனமாகும். அதனைப் பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு துணைபோகக் கூடாது. மாறாக அதனைப் பலப்படுத்த வேண்டும்’ என்ற அவரது நிலைப்பாட்டை முன்வைத்தமைக்கு ஜம்இய்யா தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது.


முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத் திருத்தம் தொடர்பில் ஜம்இய்யா சார்பாக பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் மற்றும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு  தெளிவு வழங்கச் சென்ற ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அஷ்ஷைக் முர்ஷித் முழப்பர் அவர்கள், ‘பெண்களை காதிகளாக நியமிக்க முடியாது’ என்ற ஜம்இய்யாவின் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்த விடயத்தையும் அவர்கள் குறித்த நேர்காணலில் கூறியிருந்தார்கள். இதன் மூலம் பெண்களைக் காதிகளாக நியமிக்கும் விடயத்தில் ஜம்இய்யா அன்று முதல் இன்று வரை ஒரே நிலைப்பாட்டிலேயே இருந்து வருகின்றது என்பது மேலும் தெளிவாகிறது. அத்துடன், ‘ஜம்இய்யா தனது தீர்மானத்தை மாற்றிக்கொண்டதாக தான் கூறியது தனது புரிதலில் ஏற்பட்ட தவறாக இருக்குமோ’ என குறித்த நேர்காணலில்  அவர் கூறியதன் மூலம் அவரது பெருந்தன்மையை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.


எனவே பெண்களை காதிகளாக நியமிப்பது தொடர்பில் ஜம்இய்யாவின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் கிடையாது என்பதை ஜம்இய்யா மீண்டும் ஞாபகப்படுத்திக் கொள்கிறது.


எல்லாம் வல்ல அல்லாஹ் எம்மனைவரையும் அவனது தீனின் பாதுகாவலர்களாக ஆக்கியருள்வானாக.