MMDA சட்ட திருத்த முன்மொழிவு : ஆவணத்தில் கையொப்பமிடாது, பாராளுமன்றத்தில் ஆடியதேன்..?

MMDA சட்ட திருத்த முன்மொழிவு : ஆவணத்தில் கையொப்பமிடாது, பாராளுமன்றத்தில் ஆடியதேன்..?

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டமூலத்தை விழுங்கி, ஏப்பமிட பல குழுக்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் செயற்பட்டு வருவது நாமறிந்ததே! இதில் திருத்தம் உறுதியானதும் இஸ்லாத்துக்கு முரணான ஏதும் நடந்தேறி விடுமா என்ற அச்சம் பலரிடையே ஏற்பட்டிருந்தது. இந் நிலையிலேயே நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ முஸ்லிம் சமூகத்திடம் இது தொடர்பான ஒரு முன் மொழியை கோரியிருந்தார். இப்போது இவ் வாய்ப்பின் முக்கியத்துவத்தையும் எல்லோரும் உணர்ந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

முஸ்லிம் பா.உறுப்பினர்கள், அகில இலங்கை ஜம்மியதுல் உலமா மற்றும் முஸ்லிம் புத்திஜீவிகள் இணைந்து, ஒரு முன்மொழிவை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். இதன் போது அனைத்து அமைப்பினரும் தங்களது எண்ணங்களை வெளிப்படுத்தி, ஆரோக்கியமான பல கலந்துரையாடல்கள் நடைபெற்றிருந்தன. இதில் மு.காவின் தலைவர் ஹக்கீமும் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஒரு இடத்தில் இது தொடர்பில் கருத்துரைத்த மு.காவின் தலைவர் ஹக்கீம், ” ஜம்மியதுல் உலமா பெண் காதிகளை நியமிக்க உடன்பட்டுள்ளதாக ” கூறி ஒரு சர்ச்சையும் தோன்றியிருந்தது.

இம் முன்மொழிவு இறுதி செய்யப்பட்டு, முஸ்லிம் பா.உறுப்பினர்களின் கையொப்பங்களுக்காக சென்ற போது மு.காவின் தலைவர் ஹக்கீமும், அமைச்சர் அலி சப்றியும் அதில் கைப்பமிட்டிருக்கவில்லை. விமல் வீரவன்சவின் வலது கையான, இதுவரை முஸ்லிம்களுக்கு எதிரான பல விடயங்களை பகிரங்கமாகவே முன் நின்று கூறிய பா.உறுப்பினர் முஷம்மில் கூட குறித்த ஆவணத்தில் கையொப்பமிட்டிருந்தார். நிலை இவ்வாறிருக்கையில், ஏன் இவ்விடத்தில் ஈடுபாட்டுடன் இருந்த மு.காவின் தலைவர் ஹக்கீம் கையொப்பமிடவில்லை என்பது அனைவரும் சிந்திக்க வேண்டிய ஒரு நியாயமான கேள்வி. இவர் குறித்த ஆவணத்தில் கையொப்பமிடாத போதும், தாங்களே குறித்த ஆவணத்தை சமர்பித்துள்ளதாக பாராளுமன்றத்தில் உரையாற்றியிருந்தார். இது ஏன் என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழலாம்.

குறித்த ஆவணத்தில் மு.காவின் தலைவர் ஹக்கீம் கையொப்பமிட்டால், அவர் குறித்த ஆவணத்திலுள்ள அனைத்தையும் ஏற்றதாகவே பொருள்படும். இவ் ஆவணத்திலுள்ள விடயங்களை இதன் பிறகு அவர் ஒருபோதும் மறுக்க முடியாத சூழ்நிலை ஏற்படும். தான் அந்த பொருளை கொடுக்காமல், நான் இதில் முழுதான உடன்பாடுடயவன் அல்ல என்பதை, கையொப்பமிட மறுத்ததன் மூலம் அவர் வெளிப்படுத்தியுள்ளார். அவர் இக் குறித்த விடயத்தில், தான் முரண்படும் விடயங்கள் தொடர்பில் மக்களிடம் சொல்ல முனைந்தால், அது நிச்சயம் ஹக்கீமுக்கு மீள இயலாத பாரிய வீழ்ச்சியை கொடுக்கும்.

குறித்த ஆவணத்தில் கையொப்பமிடாத செயல் நிச்சயம் முஸ்லிம் சமூகத்தில் பலத்த விமர்சனங்களை தோற்றுவிக்கும் என்பதை ஹக்கீம் அறியாதவராக இருக்க மாட்டார். தனது அரசியலின் உறுதிக்கு இதனையும் சமாளிக்க வேண்டிய தேவை ஹக்கீமுக்குள்ளது. சமாளிப்பதில் ஹக்கீமை விஞ்ச யாருமுண்டோ? இம் முன்மொழிவை மு.காவின் தலைவர் ஹக்கீம் பாராளுமன்றத்தில், தானும் இணைந்து உருவாக்கிய அறிக்கையாக உரிமை கோரினார். இதனை காட்டி, தான் குறித்த அறிக்கைக்கு எதிரானவனல்ல என்பதை முஸ்லிம் சமூகத்திடையே நிரூபிக்க முனைகிறார். இவ் ஆவணத்தை மு.காவின் தலைவர் முழுமையாக ஏற்றால் அவ் ஆவணத்தில் கையொப்பமிடாதது ஏன் என்பதை வெளிப்படுத்துவாரா? மு.காவின் தலைவர் ஹக்கீம் குறித்த ஆவணத்தை ஏற்காத போதும், அதனால் எழும் விமர்சனங்களை பாராளுமன்ற உரையின் மூலம் மிக தந்திரமாக சமாளித்து கொண்டார் எனலாம்.

மு.காவின் தலைவர் ஹக்கீமின் குறித்த பாராளுமன்ற உரையும் மிக ஆழமாக கவனம் செலுத்த வேண்டியது. தனது உரையை அவர் ஆங்கிலத்தின் மூலம் அமைத்திருந்தார். பொதுவாக இலங்கைக்கு அப்பால் ஒரு செய்தியை கொண்டு சேர்க்க விரும்புபவர் பாராளுமன்றத்தில் ஆங்கிலத்தில் பேசுவது வழமை. மு.காவின் தலைவர் இலங்கைக்கு அப்பால் உள்ள யாருக்கோ இதன் மூலம் ஒரு செய்தியை சொல்கிறாரா என்ற நியாயமான சந்தேகம் இவ்விடத்தில் எழுகிறது. இன்று ஒலுவில் பிரச்சினையை தமிழில் தானே பேசினார். ஒலுவில் பிரச்சினை தமிழில் அமைந்தாலே அவரது அரசியலுக்கு இலாபமானது. குறித்த ஆவண பிரச்சினை ஆங்கிலத்தில் அமைந்தாலே பயனுள்ளதா?

மு.காவின் தலைவர் ஹக்கீம் தனது பாராளுமன்ற உரையில் பாலின ( Gender ) காதி நியமனத்தில் அதிக முறைப்பாடுகள் வந்ததாக கூறியிருந்தார். இவ் விடயத்திலேயே அவர் ஜம்மியதுல் உலமாவுடனும் முரண்பட்டிருந்தார். இதற்காகவே அவர் குறித்த ஆவணத்தில் கையொப்பமிடவில்லை எனவும் கூறப்படுகிறது. குறித்த உரையில் இந்த விடயத்தை அவர் கூறியது பொருத்தமா என கட்டாயம் சிந்திக்க வேண்டும்.

ஏனைய சமூகங்களிடையே ஆண் காதி நியமனத்தில் ஒரு சர்ச்சை உள்ளது உண்மை. அதனை மாற்ற இஸ்லாத்தில் இடமில்லை என்பதே மார்க்க அறிஞர்களின் கருத்தாக உள்ளது. திருத்த ஆவணத்திலும் ஆண் காதியே நியமிக்கப்பட வேண்டும் என முன் மொழியப்பட்டுள்ளது.இந் நிலையில் குறித்த விடயத்தை மறைத்து, எதனை மாற்றியுள்ளோமோ, எதனை மாற்றியுள்ளதாக கூறினால், ஏனைய சமூகம் ஏற்குமோ, அதனை கூறுவதே பொருத்தம். மாற்றாத இதனை ஏன் பாராளுமன்றத்தில் கூற வேண்டும். இதன் மூலம், தான் பாலின ( Gender ) காதி நியமனத்தை ஏற்கவில்லை என்பதை, ஹக்கீம் மிக லாவகமாக வெளிப்படுத்தியுள்ளார். அவர் யாருக்கோ, ஏதோ ஒன்றை கூற முனைவது துல்லியமாகிறது. அதே நேரம் முஸ்லிம் சமூகத்திடமிருந்து தப்பிக்கும் வகையிலும் உரையாற்றியுள்ளார்.

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ முஸ்லிம் சமூகம் சார்பான ஒரு முன் மொழிவை கோரினார். அவ் ஆவணத்தில் இலங்கையில் உள்ள அதிக முஸ்லிம் மக்களின் ஆதரவை கொண்ட கட்சியான மு.காவின் தலைவர் கையொப்பம் இடவில்லை. இந்த ஆவணத்தை முஸ்லிம் சமூகம் சார்பான ஆவணமாக ஏற்க முடியுமா? இவ் விடயத்தில் ஹக்கீமை தவிர அனைவரும் ( அவரது கட்சி பா.உறுப்பினர்கள் கூட ) ஒருமித்த கருத்தில் இருந்தும், ஹக்கீமின் இச் செயலால் குறித்த ஆவணம் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தின் ஆவணம் எனும் அந்தஸ்தை இழந்துள்ளது என்பதே உண்மை. எமக்கு கிடைத்த அழகான சந்தர்ப்பத்தை தவற விட்டுள்ளோம். இது தான் இஸ்லாம் என ஒருமித்த குரலில் கூற முடியாத நிலைக்கு எமது சமூகம் தள்ளப்பட்டுள்ளது. இதில் சிந்திப்போருக்கு பல விடயங்கள் நிறைந்துள்ளன. சிந்திப்போம்..

ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,
சம்மாந்துறை.