தம்புள்ளை பேரூந்தில் துருக்கி யுவதி மீது துஷ்பிரயோகம், இராணுவ கோப்ரல் கைது..!

தம்புள்ளை பேரூந்தில் துருக்கி யுவதி மீது துஷ்பிரயோகம், இராணுவ கோப்ரல் கைது..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்நாட்டில் தங்கியிருந்த துருக்கிய யுவதி மீது பாலியல் வன்கொடுமைச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

பயணிகள் பேருந்தில் பயணித்த போது அவர் துன்புறுத்தப்பட்டதாகவும், சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இராணுவ கோப்ரல் ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும் தம்புள்ளை பொலிஸார் தெரிவித்தனர்.

மாத்தளை மெயில்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பயணிகள் போக்குவரத்து பேருந்தில் மூன்று துருக்கிய யுவதிகளும் பாகிஸ்தானிய இளைஞரும் கண்டியிலிருந்து தம்புள்ளை நோக்கி வந்து கொண்டிருந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பேருந்தில், மூன்று பயணிகள் அமரக்கூடிய இருக்கையில் இரண்டு துருக்கிய யுவதிகளும், மற்றைய இளைஞனும் யுவதியும் இரு பயணிகள் அமரும் இருக்கையில் அமர்ந்திருந்தனர்.

இடைவழியில், பேருந்தில் ஏறிய தற்போது விளக்கமறியலில் உள்ள இளைஞன், இந்த இரண்டு வெளிநாட்டுப் பெண்கள் அமர்ந்திருந்த இருக்கையில் அமர்ந்துள்ளான்.

அப்போது துருக்கி யுவதிகளில் ஒருவர் பேருந்தில் தூங்கிக் கொண்டிருந்துள்ளார்.

உறங்கிக் கொண்டிருந்த யுவதியின் உடலைத் தொடுவதைப் பார்த்த மற்றைய யுவதி, உடனடியாக அவ்விடத்தை விட்டு வெளியேறி, அவர்களுடன் வந்த இளைஞனுக்குத் தகவல் கொடுத்துள்ளார்.

உடனடியாக தலையிட்ட பாகிஸ்தான் இளைஞர், பேருந்தில் இருந்த பலரின் உதவியுடன் சம்பந்தப்பட்ட இளைஞரை பிடித்தார்.

அதன்படி சந்தேக நபரை தம்புள்ளை பொலிஸாரிடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்திருந்தனர்.

துஷ்பிரயோகத்திற்கு உள்ளான யுவதி துருக்கிய பொலிஸில் பணிபுரியும் சிரேஷ்ட அதிகாரி ஒருவரின் மகள் எனவும் மற்றைய யுவதி அங்கு ஆசிரியராக பணிபுரிவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்த இந்த யுவதிகள், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மாத்திரமன்றி இலங்கைப் பெண்களும் இவ்வாறான வன்முறைகளுக்கு ஆளாகக் கூடாது எனவும், துன்புறுத்துபவர்களுக்கு அதிகபட்ச சட்டத்தை பிரயோகிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் சர்வதேச சமூகத்திற்கு தெரியப்படுத்தவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.