ஜனாஸா எரிப்பு விவகாரம் : விசாரணை கோரும் ஹக்கீமின் விசாரணை எங்கே..?
பேரினவாதிகள் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்திய அதி உச்ச கொடூரமாக ஜனாஸா எரிப்பை கோடிடலாம். ஒரு போதும் மறந்துவிட முடியாத கொடூரமது. இன்று இந் நிகழ்வுக்கு நீதி கேட்ட ஹக்கீமின் பாராளுமன்ற உரை நிச்சயம் பாராட்டுக்குரியது. ஹக்கீமின் பேச்சு சுகாதார அமைச்சர் கெஹெல்லியை நகர விடாமல் அப்படியே உறையச் செய்திருந்தது என்றாலும் தவறாகாது. இது மிக அவசியமானதும், தகுந்த நேரத்திலும் பேசப்பட்ட ஒரு நேர்த்தியான பேச்சும் கூட.
இலங்கையில் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டு கொண்டிருந்தன. அச் சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சியிலிருந்த முஸ்லிம் கட்சிகளை சேர்ந்த ஏழு முஸ்லிம் பா.உறுப்பினர்கள், தங்களது அற்ப சுய நலன்களுக்காக ஜனாஸாவை எரித்துகொண்டிருந்த அரசை ஆதரித்திருந்தனர். அவர்கள் எழுவரும் அரசின் அடிமைகளாகவே தங்களது செயற்பாட்டை அமைத்திருந்தனர். இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு ஜனாஸாவை எரித்த மொட்டு அரசு எந்தளவு துரோகம் செய்ததோ, அதனை விட பல மடங்கு துரோகத்தை இந்த எழுவரும் செய்திருந்தனர். இதனை அனைவரும் எவ்வித மறுப்புமின்றி ஏற்பீர்கள் என நம்புகிறேன்.
இந்த ஏழு பாராளுமன்ற உறுப்பினர்களில் நால்வர் மு.காவை சேர்ந்தவர்கள். இந் நால்வரில் நஸீர் ஹாபிஸ் மாத்திரமே மு.காவை விட்டு நீக்கப்பட்டுள்ளார். அவரை மீண்டும் மு.கா இணைத்து கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஒருவர் ஒரு கட்சியை விட்டு நீக்கப்பட்டால், அவரது பாராளுமன்ற உறுப்புரிமையை கட்சி சவாலுக்குட்படுத்தலாம். இதனை ஹக்கீம் தலைமையிலான மு.கா செய்யவில்லை. ஏன் இதுவரை செய்யவில்லை என்ற வினாவின் பின்னால், ஹக்கீம் – நஸிர் ஹாபிஸுக்கிடையில் உள்ள கள்ள உறவு வெளிப்படுகிறது.
ஏனைய மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் இன்று மு.காவின் முக்கிய பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர். பா.உ ஹரீஸுக்கு மு.காவின் யாப்பையும் மீறி பிரதி தலைவர் எனும் பதவி வழங்கப்பட்டுள்ளது. குறித்த ஜனாஸா எரிப்பு சம்பவம் நிகழ்ந்து கொண்டிருக்கும் போதே பா.உ தௌபீக் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார். அண்மையில் கொண்டு வரப்பட்ட ஜனக ரத்னாயவுக்கு எதிரான பிரேரணை வாக்கெடுப்பில் கூட பா.உ ஹரீஸ் கலந்துகொள்ளாது, ஜனாஸாவை எரித்த மொட்டரசுக்கு சார்பாகவே நடந்துகொண்டார். இவர்களுக்கு எதிராக ஹக்கீம் எடுத்த நடவடிக்கை தான் என்ன..?
மு.காவின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான விசாரணை, ஒரு ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் நடைபெறவுள்ளதாக கூறப்பட்டது. அந்த விசாரணை பற்றி இன்று வரை எத் தகவலும் இல்லை. ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டு கொண்டிருந்த போது அரசை ஆதரித்து செயற்பட்ட, தனது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதுவித சிறு நடவடிக்கையும் எடுக்க துணிவற்ற ஹக்கீம், அரசிடம் விசாரணை கோருவதைப் போன்ற கேவலம் எதுவுமிராது.
முதலில் தன் பக்கமுள்ள விடயங்களை சரி செய்ய வேண்டும். பிறகே ஏனையோரிடம் நீதியை எதிர் பார்க்க வேண்டும். ஜனாஸாவை எரித்த சந்தர்ப்பத்தில், ஜனாஸாவை எரித்த அரசோடு கை கோர்த்து ஆடிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பதவி கொடுத்து, அலங்கரித்த ஹக்கீம், ஜனாஸா விடயத்துக்கு விசாரணை கோருவது நகைச்சுவையானது. ஒரு முஸ்லிமான ஹக்கீமால் குறித்த குறித்த பா.உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை முடியாது. இவரே இவ்வாறுள்ள போது இவர் கோரிக்கை விடுத்து, அரசிடம் நீதியை எதிர் பார்ப்பது எவ்வளவு முட்டாள்தனம்.
இது எமது முஸ்லிம்களின் பிரச்சினை. இதற்கு கட்டாயம் நீதி வேண்டும் என்பதில் யாருக்கும் எவ்வித சிறு ஐயமுமிருக்காது. அது எத்தனை வருடமானாலும் சரி. முஸ்லிம்களின் ஜனாஸாக்களை பலவந்தமாக எரித்த அரசோடு தேனிலவு கொண்டாடிய / கொண்டாடும், தனது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக எதுவித நடவடிக்கையும் எடுக்காது, அவர்களை கட்சியின் முக்கிய பதவிகளை கொண்டு அலங்கரித்துள்ள ஹக்கீம், இது பற்றி நீதி கோர தகுதியற்றவர்.
ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,
சம்மாந்துறை.