ஒரு நிறுவனத்திற்கு இரு தலைவர்கள்

ஒரு நிறுவனத்திற்கு இரு தலைவர்கள்

பல்வேறு அரச நிறுவனங்களுக்கு இரண்டிரண்டு தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் சபை நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 100 நாள் அரசாங்கத்தில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தனது அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களுக்கு தலைவர் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்களை நியமித்திருந்தார்.

அதன்பின்னர் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் பின்பு தேசிய அரசாங்கத்திலும் ரவி கருணாநாயக்கவுக்கு நிதியமைச்சுப் பதவி கிடைத்திருந்தது. எனினும் அவரது அமைச்சின் கீழ் முன்பிருந்த சில நிறுவனங்கள் புதிதாக உருவாக்கபட்ட அரச தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சின் கீழ் இணைக்கப்பட்டது.

இலங்கைக் காப்புறுத்திக் கூட்டுத்தாபனம், லிட்ரோ கேஸ் நிறுவனம், லங்கா ஹொஸ்பிட்டல் நிறுவனம் என்பன அவ்வாறான சில நிறுவனங்களாகும்.

இந்நிலையில் இந்த நிறுவனங்களுக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்ட அமைச்சர் கபீர் ஹாசிம் , இவற்றுக்கு புதிய தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்களை நியமித்துள்ளார்.

எனினும் ரவி கருணாநாயக்க நியமித்த முன்னைய தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் சபையினர் பதவி விலகி புதியவர்களுக்கு வழிவிட மறுப்புத் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் திறைசேரியின் செயலாளரும் பழைய தலைவர் மற்றும் பணிப்பாளர் சபையினரை பதவி நீக்கம் செய்ய வேண்டாம் என்று உத்தரவிட்டுள்ளனர்.

இதன் காரணமாக அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் அமைச்சர் கபீர் ஹாசிம் ஆகியோருக்கு இடையில் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.