அமைச்சரவை மாற்றத்தை விமர்சிக்க பொதுஜன பெரமுனவுக்கு உரிமை இல்லை..!
அமைச்சரவை மாற்றத்தை விமர்சிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு எந்த உரிமையும் கிடையாது என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை மாற்றத்தை அரசாங்கத்தின் பிரதான பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த விடயத்தில் தவறான முடிவெடுத்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் எம்.பி. நேற்று (23.10.2023) தெரிவித்திருந்தார்.
சுகாதார அமைச்சர் பதவியிலிருந்து கெஹலிய ரம்புக்வெலவை மாற்றியது முற்றிலும் தவறான விடயம் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மனுஷ நாணயக்கார இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அமைச்சரவையின் தலைவர் ஜனாதிபதியே. எனவே, அமைச்சர்களை நீக்குவதற்கும், அமைச்சர்களை மாற்றுவதற்கும், புதியவர்களை நியமிப்பதற்கும் ஜனாதிபதிக்கு முழு அதிகாரம் உண்டு. அதற்கமைவாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவையில் சிறிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்.
அவசியம் கருதி இந்த மாற்றத்தை அவர் செய்துள்ளார். இதனை விமர்சிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு எந்த உரிமையும் கிடையாது. மொட்டுக் கட்சி மாத்திரம் இந்த அரசாங்கத்தின் பங்காளிக் கட்சி அல்ல. ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எனப் பல கட்சிகள் இந்த அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளாக உள்ளன.
இந்த அரசாங்கத்தின் தலைவரும், அமைச்சரவையின் தலைவரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே ஆவார். ஜனாதிபதியின் அதிகாரத்தை எவரும் கேள்விக்கு உட்படுத்த முடியாது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளருக்கு இதை விட வேறு விளக்கத்தை என்னால் வழங்க முடியாது என தெரிவித்துள்ளார்.