
வரவு செலவு திட்டத்திற்கு முன்பு எமது கட்சி உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவி வழங்கினால் மாத்திரமே நாங்கள் ஆதரவளிப்போம் – பொதுஜன பெரமுன ரணிலுக்கு அறிவிப்பு..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வரவு செலவுத் திட்டத்துக்கு முன்னதாக அமைச்சரவை மாற்றமொன்றை செய்து தனது கட்சி உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்காதவிடத்து, எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவளிப்பது தொடர்பில் மீள்பரிசீலனை செய்யவேண்டிவருமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் அறிவித்துள்ளதாக அறியமுடிகின்றது.
அதேபோல, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் வகிக்கும் அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் அதற்கு ஆதரவாக வாக்களிக்க முடியாத நிலை இருப்பதாகவும் பொதுஜன பெரமுன ஜனாதிபதிக்கு தகவல் கூறியுள்ளது.
2024ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவுசெலவுத் திட்டம்) எதிர்வரும் 13ஆம் திகதி திங்கட்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். அதன் பின்னர், நவம்பர் 14 முதல் 21 வரை ஞாயிறு தினங்கள் தவிர்ந்து 07 நாட்கள் ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் (வரவு செலவுத் திட்ட) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் இடம்பெறவுள்ளது. அத்துடன், வரவு செலவுத் திட்ட இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு நவம்பர் 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பி.ப. 6.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.
வரவு செலவுத் திட்ட இறுதி நாள்வரை ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் தங்கியிருக்க வேண்டுமென ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். அமைச்சரவை மாற்றம் தொடர்பான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கோரிக்கையினையும் ஜனாதிபதி சாதகமாகவே பரிசீலித்து வருவதாக அறியமுடிந்தது.