
ஹம்தியின் வலது பக்க சிறுநீரகத்தை காணவில்லை?
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சிறுநீகர நோயினால் பாதிக்கப்பட்டு லேடி ரிஜ்வே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த சிறுவன் ஹம்தியின் இடது பக்க சிறுநீரகம் மட்டுமே தமது பொறுப்பில் இருப்பதாக வைத்தியசாலையில் சிறுநீரக பாதுகாப்பு பிரிவின் பொறுப்பாளர் விஷேட வைத்திய நிபுணர் ஷான்தினி குணரத்ன சாட்சி வழங்கியுள்ளார்.
கொழும்பு மேலதிக நீதவான் ரசிந்ரா ஜெயசூரிய முன்னிலையில் சாட்சி வழங்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அத்தோடு எந்த பாதிப்பும் இல்லாமல் இருந்த வலது பக்க சிறுநீரகம் தனது பிரிவுக்கு கிடைக்கவில்லை என அவர் மேலும் சாட்சியம் வழங்கியுள்ளார்.
சிறுவனின் மரணம் தொடர்பில் பொரள்ள பொலிசார் வினவிய கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே குறித்த வைத்தியர் இதனை தெரிவித்துள்ளார்.
அத்தோடு ஹம்தியின் இடது பக்க சிறுநீரகம் அமோனியா நீரில் இடப்பட்டு பாதுகாப்பாக தங்கள் பிரிவில் வைக்கப்பட்டுள்ளது என்றும் வைத்தியர் தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் ஹம்தியின் வலது பக்க சிறுநீரகம் எந்த பாதிப்பும் இல்லாமல் தேகாரோக்கியமாக இருந்தது என குறித்த வைத்தியசாலையின் பணிப்பாளர் இதற்கு முன்னர் நீதிமன்றத்தில் சாட்சி வழங்கியிருந்தார்.
சிறுவன் ஹம்தியின் இடது பக்க சிறுநீரகம் 09 வீதமும் வலது பக்க சிறுநீரகம் 91 வீதமும் செயலாற்றுகையில் இருந்தது என்றும் பணிப்பாளர் தனது சாட்சியில் ஏற்கனவே கூறியிருந்தார்.