2024 வரவு செலவுத் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்..!

2024 வரவு செலவுத் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை ஜனாதிபதி ரணில் இன்று பிற்பகல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ள நிலையில் அதற்கான அங்கீகாரம் இன்று காலை நடைபெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது.

• ஜனாதிபதியினால் வரவுசெலவுத்திட்ட உரை இன்று நண்பகல் 12 மணிக்கு முன்வைக்கப்படும்

• இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் நவம்பர் 14ஆம் முதல் 21 வரை, இரண்டாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு நவம்பர் 21ஆம் திகதி பி.ப 6.00 மணிக்கு

• குழுநிலை நவம்பர் 22ஆம் திகதி முதல் டிசம்பர் 13ஆம் திகதி வரை, மூன்றாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 13ஆம் திகதி பி.ப 6.00 மணிக்கு

2024 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு அல்லது ‘வரவு செலவுத் திட்ட உரை’ நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று (13) நண்பகல் 12.00 மணிக்குப் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.

அதன்பின்னர், நவம்பர் 14 ஆம் திகதி முதல் 21 வரை ஞாயிறு தினங்கள் தவிர்ந்து 7 நாட்கள் ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் (வரவுசெலவுத்திட்ட) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் இடம்பெறவுள்ளது. வரவுசெலவுத்திட்ட இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு நவம்பர் 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பி.ப. 6.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

அதனையடுத்து, குழுநிலை விவாதம் நவம்பர் 22 ஆம் திகதி புதன்கிழமை முதல் டிசம்பர் 13 ஆம் திகதி புதன்கிழமை வரை ஞாயிறு தினங்கள் தவிர்ந்து 19 நாட்கள் இடம்பெறவுள்ளது. அதற்கமைய, 2024 நியதியாண்டுக்கான வரவுசெலவுத்திட்ட மூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 13 ஆம் திகதி புதன்கிழமை பி.ப. 6.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

வரவுசெலவுத்திட்ட விவாதத்தின் போது தினமும் மு.ப 9.30 மணி முதல் 10.00 மணிவரை 5 வாய்மொழி மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டள்ளது. அதனைத் தொடர்ந்து பி.ப 10.00 மணி முதல் பி.ப 6.00 மணி வரை விவாதம் நடைபெற்றும். வாக்கெடுப்பு இடம்பெறும் நாட்கள் தவிர்ந்த ஏனைய நாட்களில் தினமும் பி.ப 6.00 மணி முதல் 6.30 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணைக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் அரசாங்கத்தின் மொத்த செலவீனம் ஏறத்தாழ 7,833 மில்லியன் ரூபாவாக அமைந்திருப்பதுடன், இதில் பொதுச் சேவைக்கான செலவீனத்துக்கு 3,861 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 2024 நிதியாண்டில் இலங்கையில் அல்லது வெளியிலோ திரட்டப்பட வேண்டிய பணங்களுக்கான இயைபான சட்டங்களின் நியதிகளின் படி இத்தால் அதிகரமளிக்கப்படுகின்ற நிதியாண்டு 2024 இல் பெற்றுக்கொள்ளக் கூடிய கடன்படிக்கூடிய எல்லை 3,900 மில்லியன் ரூபாவை விஞ்சுதலாகாது.

இந்த ஒதுக்கீட்டுச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் (முதலாவது மதிப்பீடு) இது அரசாங்க நிதிகள் பற்றிய குழுவில் சமர்ப்பிக்கப்பட்டு கடந்த 09ஆம் திகதி அனுமதி பெறப்பட்டது.