சந்திரிக்கா, மஹிந்த மற்றும் மைத்திரி தலைமையில் அணிதிரள்வோம் – துமிந்த

சந்திரிக்கா, மஹிந்த மற்றும் மைத்திரி தலைமையில் அணிதிரள்வோம் – துமிந்த

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா, மஹிந்த மற்றும் ஜனாதிபதி மைத்திரி தலைமையில் ஒன்றுபட வேண்டுமென்று துமிந்த திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக நேற்று கிரிபத்கொடையில் நடைபெற்ற கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி செயற்பாட்டாளர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போது அமைச்சர் துமிந்த திசாநாயக்க இந்த அறைகூவலை விடுத்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் சுதந்திரக் கட்சியை ஆழமாக நேசிப்பவர்கள்.

அவர்கள் இக்கட்சியை பலப்படுத்த ஏராளம் விடயங்களை மேற்கொண்டுள்ளார்கள். அதேபோன்று இன்றைய ஜனாதிபதி மைத்திரியும் கட்சியின் ஒற்றுமை, வெற்றியை எதிர்பார்த்து செயலாற்றுகின்றார்.

இந்நிலையில் கடந்த தேர்தல்களின்போது கட்சிக்குள் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகளை தூக்கிபிடித்துக் கொண்டு நாம் பிளவுபட்டுவிடக் கூடாது. சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவு தற்காலிகமானது என்று ஐக்கிய தேசியக்கட்சிக்காரர்களுக்கும் தெரியும். ஆனால் நமது கட்சி பிளவுபட்டால் அதன் நன்மை ஐக்கிய தேசியக்கட்சிக்கு கிடைக்கும் என்று அவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

எனவே இனிவரும் காலங்களில் கட்சிக்குள் பல்வேறு கருத்து முரண்பாடுகள் இருக்க முடியாது. ஒரே தலைமையின் கீழ் ஒன்றுபட்டு எதிர்வரும் தேர்தல்களை வெற்றிகொள்ள அனைவரும் முன்வர வேண்டும் என்றும் அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.