இளம் பிக்குகள் பாலியல் துஷ்பிரயோக வழக்கு மறு விசாரணைக்காக ஒத்தி வைப்பு..!

இளம் பிக்குகள் பாலியல் துஷ்பிரயோக வழக்கு மறு விசாரணைக்காக ஒத்தி வைப்பு..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சட்டமா அதிபரின் கவனத்திற்காக சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் தொடர்பில் உரிய  ஆலோசனை கிடைக்கும் வரை இளம் பிக்குகள் மீதான  பாலியல்  துஷ்பிரயோகம் தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு  பல நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்ட பிரதம  பௌத்த மதகுரு  தொடர்பான  வழக்கு எதிர்வரும் ஏப்ரல்  மாதம்  02 ஆம்  திகதி வரை மறு விசாரணைக்காக ஒத்தி  வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம்  கல்முனை தலைமையக   பொலிஸ் பிரிவிற்குட்பட்ட   விகாரை ஒன்றில்   வைத்து 3 இளம் பிக்குகள்  பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பிலான வழக்கு நேற்று செவ்வாய்க்கிழமை  (09)   கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில்   எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் பொலிஸார் மற்றும் பிரதிவாதியின் சட்டத்தரணிகளின்  விண்ணப்பங்கள் ஆராயப்பட்டு   மறுவிசாரணைக்காக   எதிர்வரும் ஏப்ரல்  மாதம்  02 ஆம்  திகதி வரை ஒத்தி  வைக்குமாறு கல்முனை நீதிவான்   உத்தரவிட்டார்.

அம்பாறை மாவட்டம் சடயந்தலாவை பகுதி ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 இளம் பிக்குகள்  கல்முனை பகுதியில் அமைந்துள்ள    விகாரை ஒன்றில்    பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் ஒன்றின் அடிப்படையில் 2022 செப்டம்பர் 13 ஆம் திகதி  கல்முனை சுபத்ரா ராமய   விகாராதிபதியாக  ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர் என்றழைக்கப்படும் பிரதான பௌத்த மதகுரு அம்பாறை மாவட்ட சிறுவர் பெண்கள் விசேட பிரிவினரால் சந்தேகத்தின் அடிப்படையில்  கைது செய்யப்பட்டு கல்முனை  நீதிமன்ற நீதிவான் முன்னிலையில்   ஆஜர்படுத்தப்பட்டிருந்தமை யாவரும் அறிந்ததே.

இதனடிப்படையில் கல்முனை  நீதிமன்ற நீதிவான்  கைதான  சந்தேக நபரான பௌத்த மதகுரு  தொடர்புபட்ட  3 வழக்குகளில்  தலா 3 பேர் வீதம்  9 பேர் கொண்ட  5 இலட்சம் பெறுமதியான  சரீரப்பிணையில் செல்ல வேண்டும்.    ஒவ்வொரு மாத இறுதியில்   மீண்டும் அருகில் உள்ள கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு சென்று கையொப்பம் இடுதல் குறித்த வழக்கின் சாட்சிகள்  குடும்பத்தினரை   அச்சுறுத்துதல் வழக்கு தொடர்பிலான தலையீடு செய்யாதிருத்தல் வேண்டும். வெளிநாடு செல்வதற்கு தடை அதாவது கடவுச்சீட்டினை மன்றிற்கு ஒப்படைத்தல் வேண்டும்.  அவ்வாறு தன்னிடம் கடவுச்சீட்டு  இல்லை எனின்    உரிய தரப்பினரின் உறுதிப்படுத்தி மன்றிற்கு தெரிவிக்க வேண்டும் கிராம சேவகரின் நலச்சான்றிதழ் சமரப்பிக்க வேண்டும் என்ற கடும் நிபந்தனையுடன் குறித்த  பௌத்த மதகுரு  பிணையில் விடுவித்து  உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,   இவ்வழக்கு  மீண்டும்   எதிர்வரும்  டிசம்பர்  மாதம் 13 ஆம்  திகதி வரை வழக்கினை  நீதிவான் ஒத்தி வைக்க  உத்தரவிட்டார்.

சம்பவத்தின் பின்னணி

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட    விகாரை ஒன்றில் புதிதாக இணைந்த  3 இளம் பிக்குகள் திடீர் சுகயீனம் அடைந்துள்ளதாக  தெரிவிக்கப்பட்டு  கல்முனை ஆதார  வைத்தியசாலையில் கடந்த வருடம்  ஆகஸ்ட் இறுதி பகுதியில்  இளம் பிக்குகளின்  பெற்றோரினால்   அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

பின்னர் குறித்த வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியின் ஆலோசனைக்கமைய அம்பாறை பொது  வைத்தியசாலையில் உள்ள பிக்குகளுக்கான  தனியான சிகிச்சை பிரிவிற்கு    3 இளம் பிக்குகளும் வைத்திய பரிசோதனைக்காக  மாற்றப்பட்டு  சட்ட வைத்திய அதிகாரியிடம் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் அம்பாறை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 3 இளம் பிக்குகளும் தாம் பல்வேறு சந்தர்ப்பங்களில் தலைமை பௌத்த துறவியினால்  பாலியல்  துஷ்பிரயோகத்திற்கு ஆளாகிதாக  குறிப்பிட்டிருந்தனர்.

இதனை அடுத்து குறித்த 3 இளம் பிக்குகளும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி இருப்பதாக சட்ட வைத்திய அதிகாரியும் தனது வைத்திய அறிக்கை ஊடாக  அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு   குறிப்பிட்டிருந்தார்.

இதனை அடுத்து இச்சம்பவம் தொடர்பில்  மருத்துவ அறிக்கை பிரகாரம்  கடந்த வருடம் 2022   செப்டம்பர் 01 ஆம் திகதி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்பின் பேரில்  மாவட்ட சிறுவர் பெண்கள் விசாரணைப் பிரிவினர் வைத்தியசாலைக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இதன் பின்னர் குறித்த சம்பவ விசாரணை அறிக்கை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் அறிவுறுத்தலின் பிரகாரம் கடந்த வருடம் 2022   செப்டம்பர் 05 ஆந் திகதி கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு அனுப்பட்டு சட்ட நடவடிக்கைக்காக தயார் படுத்தபட்டிருந்தது.

இதற்கமைய   3 இளம் பிக்குகள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியதாக குற்றஞ்சாட்டப்பட்ட  பிரதான சந்தேக நபராக கருதப்படும் பௌத்த மதகுரு தொடர்பில்  கடந்த 2022

செப்டம்பர் மாதம் 13 ஆந் திகதி  கல்முனை நீதிவான் நீதிமன்றத்திற்கு அம்பாறை மாவட்ட சிறுவர் பெண்கள் விசாரணைப் பிரிவினர்  அறிக்கை சமர்ப்பித்திருந்த நிலையில் பௌத்த மதகுரு 2022  செப்டம்பர்  மாதம் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். அத்துடன்   மீண்டும் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் 2022  செப்டம்பர்  மாதம் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை  நீதிமன்ற நீதிவான்  உத்தரவிட்டிருந்தார்.

மேலும், இச்சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட   இளம் பிக்குகளின் பெற்றோர் ஏற்கனவே  வழங்கிய  முறைப்பாட்டிற்கமைய  அம்பாறை பகுதியில் இருந்து வருகை தந்த  விசேட பொலிஸார்   கல்முனை பகுதியில் உள்ள  குறித்த பௌத்த விஹாரைக்கு சென்று  விசாரணை மேற்கொண்டதுடன் சந்தேக நபரான பிரதான பௌத்த மதகுருவிடம் வாக்குமூலங்களை  பொலிஸார் பெற்று கைது செய்திருந்தனர்.

மேலும்   பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான  சகோதரர்களான  08 ,13 ,14  வயது மதிக்கத்தக்க  3 இளம் பிக்குகளும் ஏற்கனவே   அம்பாறை  புறநகர் பகுதி ஒன்றியில் இருந்து துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட நிலையில்  அண்மையில் கல்முனை பகுதியில் உள்ள பௌத்த விஹாரைக்கு புதிதாக இணைக்கப்பட்டிருந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.