மன்னாரில் வீடமைப்பிற்கு ஒதுக்கப்பட்ட காணியை வனத்துறை விடுவிக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டம்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எட்டு வருடங்களுக்கு முன்னர் அரசாங்கத்தினால் வீடுகளை நிர்மாணிப்பதற்காக ஒதுக்கப்பட்ட காணியை உடனடியாக விடுவிக்குமாறு கோரி மன்னார் பிரதேச மக்கள் குழுவொன்று போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளது.
மன்னார் மாவட்டம் நானாட்டான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட இசைமாலைத்தாழ்வு பிரதேச மக்கள் தமது கிராமத்தில் வசிக்கும் 113 குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணிப்பதற்காக கொம்பன்சாய்ந்தகுளம் பிரதேசத்தில் 46 ஏக்கர் காணியை அரசாங்கம் ஒதுக்கீடு செய்த போதிலும் வனத்துறையினர் இதுவரையில் அந்த காணியை விடுவிக்கவில்லை எனத் தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நேற்று முன்தினம் முன்னெடுத்தனர்.
‘எங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் கொம்பன்சாய்ந்த குளத்தில் எங்கள் மக்களுக்கு குடியிருப்புக் காணி அவசியம். எங்கள் ஊரில் ஒரு வீட்டில் மூன்று நான்கு குடும்பங்கள் வாழ்கின்றோம்.
இடவசதி போதாது. ஆகவேதான் இன்று போராடுகின்றோம். 2016ஆம் ஆண்டு இந்தக் காணியை எங்களுக்கு வழங்குவதாக வட மாகாண அதிகாரிகள் அறிவித்தனர். ஆனால் வனவளத் திணைக்களத்தினர் இதனை இன்னும் விடுவிக்கவில்லை. முன்னாள் பிரதேச செயலாளர் இதனை செய்வதாக கூறினாலும் செய்யவில்லை. ‘போராட்டத்தில் கலந்து கொண்ட பெண் ஒருவர் தெரிவித்தார்.
இசைமாலைதாழ்வு பிரதேசத்தில் வசிப்பவர்களுக்கு வீடுகள் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட காணியின் வேறு பிரதேசங்களைச் சேர்ந்த இருவர் சுமார் ஐந்து ஏக்கர் நிலத்தை அபகரித்து விவசாத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்கள் மீது அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
போராட்டம் முன்னெடுக்கப்பட்ட இடத்துக்கு வந்த நானாட்டான் உதவி பிரதேச செயலாளரிடம் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை போராட்டக்காரர்கள் கையளித்தனர்.
இசைமாலைதாழ்வு கிராம மக்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை மாவட்ட உதவிச் செயலாளரிடமும் கையளித்ததாக பிரதேச ஊடகவியலாளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.