எங்களுடன் இருக்கும்போது ஜனநாயகவாதியான ரணில் பொதுஜன பெரமுனவுடன் இணைந்து குறுஞ் சிந்தனையாளராகினார்..!

எங்களுடன் இருக்கும்போது ஜனநாயகவாதியான ரணில் பொதுஜன பெரமுனவுடன் இணைந்து குறுஞ் சிந்தனையாளராகினார்..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  ஐக்கிய மக்கள் சக்தியினால் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின்போது முன்னெடுக்கப்பட்ட தாக்குதல் களின்போது, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை இலக்கு வைத்தே கண்ணீர்ப் புகை குண்டுகள் வீசப்பட்டன். சஜித்துக்கு உயிராபத்து ஏற்படுத்தும் வகையிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றது. எங்களுடன. இருக்கும்போது ஜனநாயகவாதியாக இருந்த ரணில் பொதுஜன பெரமுனவுடன் இணைந்து குறுகிய சிந்தனைகொண்டவராக மாறிவிட்டார் என்று பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரை மீதான விவாதத்தில் நேற்று (08) கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரைகளை மூன்று வருடங்கள் செவிமடுத்துவருகிறோம். இருந்தபோதும் இம்முறை சபையிலிருந்து வெளியேறியிருந்தோம். எங்களின் ஆதரவு அவசியமென்றால் எதிர்க் கட்சி உறுப்பினர்களுக்கு ஒரு முக்கியத்துவம் இருக்கவேண்டும்.

அண்மையில் நாங்கள் அமைதி எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தோம். அதன்மீது தாக்குதல் நடத்தினார்கள். தடையுத்தரவு வழங்கப்பட்ட பிரதேசங்களுக்கு அப்பாலான பகுதிகளிலேயே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தோம். எங்களை தாக்கி துரத்தியடித்துவிட்டு எங்களின் ஆதரவை எதிர்பார்ப்பதற்கு வெட்கப்பட வேண்டும். இவர்களுக்கு நாங்கள் ஆதரவளித்தால் மக்கள் எங்களையே துரத்தியடிப்பார்கள்.

ஒவ்வொருநாளும் பாராளுமன்றத்துக்கு வந்து எங்களின் ஒத்துழைப்பை கோருகிறார்கள். எதிர்க் கட்சியிடமிருந்து எவ்வாறு ஒத்துழைப்பைப் பெறுவது. எதிர்க்கட்சித் தலைவரை நோக்கி வீசப்பட்ட கண்ணீர் புகைக் குண்டு அவருக்கு உயிராபத்தை ஏற்படுத்தும் வகையிலேயே முன்னெடுக்கப்பட்டது. அவரை இலக்கு வைத்தே தாக்குதல் மேற்கொண்டார்கள். அவரின் நேரத்துக்கு சற்று தூரத்தில் விழுந்தது. அவ்வாறு இல்லாவிட்டால் அவருக்கு ஆபத்தாக முடிந்திருக்கும். இதுபோன்ற செயற்பாடுகளுக்கு எங்களால் ஆதரவளிக்க முடியாது.

ரணில் விக்கிரமசிங்க எங்களுடன் இருக்கும்போது இவ்வாறு செயற்படவில்லை. உலக ஜனநாயக சங்கத்தின் தலைவராக செயற்பட்டிருந்தார். ஆனால் பொதுஜன பெரமுனவிடமிருந்து குறுகிய சிந்தனைகளுடன் செயற்பட ஆரம்பித்து விட்டார்.

இதுவொரு தேர்தல் ஆண்டாகும். ஆனால் ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரையில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் எந்தவொரு கருத்தும் வெளியிடப்படவில்லை. குறைந்தது ஜனநாயகம் தொடர்பில் கூட எதுவும் பேசவில்லை.

சிவில் சமூகம் சிலவற்றை தமக்கு கீழ் வைத்துக்கொண்டு ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்கும் முயற்சிகளே இடம்பெற்று வருகின்றன. அதுவே இதன் பின்னால் இருக்கும் சூழ்ச்சியாகும். தேர்தலை ஒத்திவைக்கும் நோக்கில் எவ்வாறாவது நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்குவதற்கான யோசனையொன்றை முன்வைப்பதற்கும் திட்டமிடுகிறார்கள்.

அதன் பின்னர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்குவதற்கு புதிய சட்டத்தை உருவாக்க வேண்டும் என்பார்கள். அதற்கும் எமக்கு ஒரு வருடம் தேவைப்படும். அதனால், ஜனாதிபதி தேர்தலையும் ஒருவருடத்துக்கு ஒத்திவைப்பதற்கான முயற்சிகள் இருக்கின்றன.

கடந்த வாரம் ஜனாதிபதி ஆணைக்குழுவில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. அதன்போது, இளைஞரொருவர் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதற்கு நிதி இல்லை என்று குறிப்பிட்டதுபோன்று, ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு நிதி இல்லை என்றால் என்ன செய்வீர்கள் என்று கேட்டிருந்தார். அதற்கு தேர்தல் ஆணைக்குழு தலைவரிடம் எந்த பதிலும் இருக்கவில்லை. உள்ளூராட்சிமன்றத் தேர்தலை காலந்தாழ்த்தினார்கள். அதற்கு காரணம் இவர்கள் மக்களை சந்திப்பதற்கு பயந்தவர்களாவர். அடுத்த தேர்தல் தொடர்பில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து என்ன பிரச்சினை வந்தாலும் அந்த தேர்தலை நடத்துவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.

மக்களின் பிரச்சினைகள் குறித்து எதுவும் ஜனாதிபதியின் உரையில் குறிப்பிடவில்லை. மக்களின் பிரச்சினையை விட இவர்களுக்கு சர்வதேச அமைப்புகளே முக்கியமானவையாகும். நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டுவந்தவர்களே தற்போது ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்குகிறார்கள். இந்த நிலைமை ஏற்படுத்தியது இந்த அரசாங்கம் என்பதால், இதுதொடர்பில் ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்குவதற்கு இந்த அரசாங்கத்துக்கு எந்த உரிமையும் இல்லை.

இந்த பொருளாதார நெருக்கடிக்கு அரசியல் தீர்வு பொறுத்தமற்றது என்று ஜனாதிபதி கூறினாலும், அரசியல் தீர்வே இந்த நெருக்கடிக்கு பொருத்தமானதாகும். தேர்தலை முறையாக நடத்தினால் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைத்துவிடும். இதுவே சிறந்த தீர்வாகும்.

ஐக்கிய மக்கள் சக்தியிலுள்ள அநேகமானவர்கள் தன்னுடன் அரசியல் செய்தவர்கள் என்றும் அவர் கூறினார். அது உண்மை. ஆனால், அந்தப் பக்கத்தில் இருக்கும் ரணில் விக்கிரமசிங்க எங்களுடன் இருந்தவர் இல்லை. அவரின் குணம் மாறிவிட்டது. அவ்வாறு இல்லாவிட்டால் அமைதி போராட்டங்கள் மீது தாக்குதல் நடத்துவாரா? ஒக்டோபர் மாதம் வரை காத்திருக்க வேண்டியதில்லை. விரைந்து ஜனாதிபதித் தேர்தலையும் பாராளுமன்றத் தேர்தலையும் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவையான திருத்தங்களை கொண்டுவாருங்கள். அதற்கு நாங்கள் ஆதரவளிப்போம் என்றார்.

 

COMMENTS

Wordpress (0)