‘விடை பெறுகிறேன்’ மதீஷவின் பதிவில் உறைந்த CSK ரசிகர்கள்..!

‘விடை பெறுகிறேன்’ மதீஷவின் பதிவில் உறைந்த CSK ரசிகர்கள்..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வேகப் பந்துவீச்சாளரான மதீஷ பத்திரன 2024 ஐபிஎல் தொடரில் பாதியில் விலக தீர்மானித்தமை குறித்து அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்த நிலையில், இதை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் அதிர்ந்து போய் உள்ளனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வேகப் பந்துவீச்சாளராக இருந்து வருகிறார் மதீஷ பத்திரன. தோனியால் பட்டை தீட்டப்பட்டு அவரது பந்துவீச்சு திறன் மேம்பட்டு இருந்தது. இரண்டு ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிக விக்கெட்களை வீழ்த்தி இருந்த அவர், அந்த அணி கடந்த ஆண்டு ஐபிஎல் கிண்ணத்தினை வெல்லவும் முக்கிய காரணமாக இருந்தார்.

அதேபோல 2024 ஐபிஎல் தொடரிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அவர் முக்கிய பங்காற்றுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். எனினும் முதல் இரண்டு போட்டிகளில் அவரால் காயத்தால் விளையாட முடியாத நிலை இருந்தது. அதன்பின் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக போட்டிகளில் விளையாடினார். இடையிடையே சிறிய காயங்களால் அவர் சில போட்டிகளில் விளையாடவில்லை. இந்த நிலையில் ஆறு போட்டிகளில் மட்டுமே விளையாடி இருந்த அவர் தற்போது ஒட்டுமொத்தமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் முடிவை எடுத்திருக்கிறார்.

அவருக்கு தசைப் பிடிப்பு இருந்ததாக கூறப்படும் நிலையில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அவரை ஐபிஎல் தொடரில் இருந்து விலகுமாறு அறிவுறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை அடுத்து அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து விலகி சிகிச்சைக்காக இலங்கை வந்துள்ளார். அவர் ஆறு போட்டிகளில் 13 விக்கெட்களை வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

சிறப்பாக செயல்பட்ட போதும் காயத்தால் அவர் விலகி இருக்கிறார். இது குறித்த அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘கடினமான நிலையில் விடைபெறுகிறேன். 2024 ஐபிஎல் தொடரின் கிண்ணத்தினை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அறையில் விரைவில் பார்ப்பேன் என நம்புகிறேன். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆசிகள் மற்றும் ரசிகர்களின் அன்பு கிடைத்ததற்கு மிகவும் பெருமைப்படுகிறேன்’ எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.

https://www.facebook.com/share/p/wGspEr4rvhtu63yT/?mibextid=oFDknk

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்னும் பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யவில்லை. இன்னும் மூன்று லீக் போட்டிகளில் விளையாட உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அந்த மூன்றிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு உறுதியாக செல்ல முடியும். இந்த நிலையில் முக்கிய வேகப்பந்துவீச்சாளர் மதீஷ பத்திரன இல்லாதது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாகும் என்பது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களுக்கு பெரும் கேள்வியாக உள்ளது.