வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு புதனன்று  வாக்கெடுப்பு

வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு புதனன்று வாக்கெடுப்பு

தேசிய அரசின் 2016ம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 2ம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ளது.

வரவு – செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக தேசிய அரசில் அங்கம் வகிக்கும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன வாக்களிக்கும்.

இதேவேளை, வரவு – செலவுத் திட்டத்தை வரவேற்றுள்ள பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில், ஜே.வி.பி. மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மஹிந்த ஆதரவு தரப்பினர் வரவு – செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிக்கவுள்ளனர்.

மேற்படி இரு தரப்பினரும், வரவு – செலவுத் திட்டத்துக்கு தமது எதிர்ப்பை பகிரங்கமாக வெளியிட்டுள்ளனர்.

இம்மாதம் 20ம் திகதி வெள்ளிக்கிழமை நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவால் சமர்ப்பிக்கப்பட்ட 2016ம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 19ம் திகதி சனிக்கிழமை இடம்பெறும்.

தேசிய அரசின் இந்த வரவு – செலவுத் திட்டமானது மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேறும்.

ஜே.வி.பி. மற்றும் மஹிந்த தரப்பு எதிர்த்தாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு இருப்பதால் வரவு – செலவுத் திட்டத்தை மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் அரசு நிறைவேற்றும் நிலைமை காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.