சல்மான்கானை கொலை செய்துவிட்டு இலங்கைக்குத் தப்பவிருந்த குழுவினர் கைது – இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தி..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஹிந்தி திரைப்பட நடிகர் சல்மான்கானை கொலை செய்துவிட்டு இலங்கைக்குத் தப்பவிருந்த குழு ஒன்று தொடர்பாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 14ஆம் திகதி மும்பை – பண்ட்ராவில் உள்ள சல்மான்கானின் பண்ணை வீட்டுக்கு வெளியில் அடையாளம் தெரியாத குழு ஒன்று துப்பாக்கிச் சூடு நடத்தியது.
அதனையடுத்து ஐந்து பேர் இந்த சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வந்தனர்.
இது தொடர்பான குற்றப்பத்திரிகை நேற்று (02) மும்பை நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து, அதன் விபரங்களை இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
இதில் சல்மான்கானை படப்பிடிப்பின் போது சுட்டுக் கொல்வதற்கு அந்தக் குழு திட்டமிட்டிருந்தமை தெரியவந்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதற்காகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் அவர்கள் திட்டமிட்டு வந்திருப்பதாகவும், இதற்காக அதிநவீன ஆயுதங்களைப் பாகிஸ்தான் மற்றும் துருக்கியிலிருந்து கொள்வனவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.