சர்வதேச போட்டிகளில் சுனில் நரைனுக்கு பந்து வீசத்தடை

சர்வதேச போட்டிகளில் சுனில் நரைனுக்கு பந்து வீசத்தடை

சர்வதேச போட்டிகளில் பந்துவீச மேற்கிந்திய தீவுகள் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீரர் சுனில் நரைனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணியின் “சுழல் மாயாவி” சுனில் நரைன் ஒரு ஓவரில் 6 பந்துகளையும் வித்தியாசமாக வீசும் வல்லமை படைத்தவர்.

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் தரவரிசையிலும் முதலிடத்தில் உள்ளார்.

இந்நிலையில் அண்மையில் இலங்கைக்கு எதிராக பல்லேகெலேயில் நடந்த ஒருநாள் போட்டியில் பங்கேற்ற நரைன் விதிமுறைக்கு மாறாக பந்துவீசுவதாக புகார் எழுந்தது.

அதாவது, அனுமதித்த அளவான 15 டிகிரியை தாண்டி முழங்கையை வளைப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதைத் தொடர்ந்து கடந்த 17ம் திகதி இங்கிலாந்தில் உள்ள லாபாரோ பல்கலைக்கழகத்தில் இவருக்கு பந்துவீச்சு பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் அவர் விதிமுறையை மீறி பந்துவீசி வருவது தெரியவந்தது. இதன் அடிப்படையில் அவர் தொடர்ந்து பந்துவீச சர்வதேச கிரிக்கெட் வாரியம் தடை விதித்தது.

சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் விதிமுறைப்படி அனைத்து நாடுகளில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளிலும் சுனில் நரைன் பந்துவீச தடைவிதிக்கப்படுகிறது.

இதனால் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் விளையாடி வரும் நரைன், பிரிமியர் போட்டிகளில் பங்கேற்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.