“இது முடிவல்ல ஆரம்பமே! ஐந்து வருடங்களின் பின்னர் பல மாற்றங்களுடன் பலமான தொழிற்ச் சங்கமாக மீண்டெழுந்து வெற்றிக்கொள்வோம் – ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு.”
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இ.தொ.கா பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் நுவரெலியா, நானுஓயா மற்றும் புஸ்ஸலாவ ஆகிய காரியாலயங்களுக்கு உட்பட்ட இ.தொ.காவின் மாவட்டத் தலைவர், தலைவி மற்றும் தோட்டக்கமிட்டி தலைவர், தலைவிமார்களுடனான சந்திப்பானது நேற்று (24) இடம்பெற்றது..
இந்தச் சந்திப்பின் போது மக்கள் மத்தியில் உரையாடும் போதே ஜீவன் தொண்டமான் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்திருந்தார்.
மேலும், நுவரெலியா பொது நூலக கட்டிடத் தொகுதியில் மற்றும் புஸ்ஸலாவ கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்ற குறித்த இச்சந்திப்பின் போது, நடந்து முடிந்த 2024 பாராளுமன்ற பொதுத் தேர்தலில் இ.தொ.கா விற்கு வாக்களித்த அனைத்து ஆதரவாளர்களுக்கும் கட்சியின் பொதுச் செயலாளர் என்ற வகையில் நான் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
அதேபோல், எதிர்வரும் காலங்களில் இ.தொ.கா வின் வளர்சிக்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து எவ்வாறு செயற்படுவது அதன் மூலமாக எவ்வாறான வெற்றியினை பெற்றுக்கொள்வது என்று விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இச் சந்திப்பின்போது, இ.தொ.கா பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், தேசிய அமைப்பாளர் பழனி சக்திவேல், பிரதி தலைவர் கணபதி கணகராஜ், பிரதி தேசிய அமைப்பாளர் ராஜதுரை, பிரதி பொதுச்செயலாளர் செல்லமுத்து காரியாலய உத்தியோகத்தர்கள் உட்பட கட்சியின் முக்கியஸ்த்தர்கள் என பலர் கலந்துக்கொண்டனர்.