தென்ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய வீரர்கள்

தென்ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய வீரர்கள்

இந்திய டெஸ்ட் அணி கெப்டன் வீராட் கோலி மிகுந்த அதிஷ்டம் மிக்கவர். அவரது தலைமையிலான அணியில் சிறந்த சுழற்பந்து வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

அஸ்வின், ரவிந்திர ஜடேஜா, அமித் மிஸ்ரா ஆகியோர் தென்ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரில் ஆதிக்கம் செலுத்தி டெஸ்ட் தொடரை வெல்ல முக்கிய பங்கு வகித்தனர். இதுவரை நடந்த 3 டெஸ்டில் கைப்பற்றப்பட்ட 50 விக்கெட்டுகளில் இந்த 3 பேரும் சேர்ந்து 47 விக்கெட்டுகளை வீழ்த்தி முத்திரை பதித்தனர்.

தற்போது வீராட் கோலிக்கு அஸ்வின், ஜடேஜா, அமித் மிஸ்ரா கிடைத்துள்ளனர். இவர்கள் மொகாலி, நாக்பூர் டெஸ்டில் 3 நாட்களிலேயே ஆட்டத்தை முடித்து தென்ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களை கதிகலங்க வைத்தனர்.

அஸ்வின், ஜடேஜா 3 டெஸ்டிலும் விளையாடினர். அமித் மிஸ்ரா பெங்களூர் டெஸ்டில் மட்டும் இடம் பெறவில்லை. மழையால் இந்த டெஸ்டில் தென்ஆப்பிரிக்க அணி மட்டும் ஒரு இன்னிங்சை முழுமையாக ஆடியது.

சென்னையை சேர்ந்த அஸ்வின் தான் அதிகமாக ஆதிக்கம் செலுத்தினார். அவர் 5 இன்னிங்சில் 24 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். ஜடேஜா 16 விக்கெட்டும், அமித் மிஸ்ரா (4 இன்னிங்ஸ்) 7 விக்கெட்டும் கைப்பற்றி உள்ளனர். மீதியுள்ள 3 விக்கெட்டுகளில் வேகப்பந்து வீரரான வருண் ஆரோன் இரண்டை எடுத்தார். ஒரு விக்கெட் ரன் அவுட் ஆகும்.

பொதுவாக இந்திய ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சுக்கு ஏற்ற வகையில் இருக்கும். 3–வது மற்றும் 4–வது நாளில் ‘பிட்ச்’ சுழற்பந்து வீச்சுக்கு முழுமையாக மாறிவிடும். ஆனால் தற்போது நடைபெறும் தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் முதல் நாளில் இருந்தே ஆடுகளம் சுழற்பந்துக்கு சாதகமாக காணப்படுகிறது. இந்திய அணியின் நிர்வாகத்துக்கு ஏற்றவாறு ஆடுகளம் அமைக்கப்பட்டுள்ளது. இதை இந்த மும்மூர்த்திகள் சரியாக பயன்படுத்தி பலம் வாய்ந்த தென்ஆப்பிரிக்காவை நிலை குலைய வைத்துவிட்டனர்.