தென்கிழக்குப் பல்கலைக்கழக பொறியியல் பீடம் மூடப்படாது – பிரதமர்

தென்கிழக்குப் பல்கலைக்கழக பொறியியல் பீடம் மூடப்படாது – பிரதமர்

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடம் ஒருபோதும் மூடப்பட மாட்டாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.

அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதமர் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ஆகியோரை கடந்த சனிக்கிழமை(28)  அன்று சந்தித்து பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தியபோதே இந்த உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் போதியளவு வளங்கள் இல்லாததால் அந்த பீடத்தை மூடி தம்மை வேறு பல்கலைக்கழகங்களுக்கு இடமாற்றுமாறு கோரி தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின்  மாணவர்கள் வகுப்புக்களை புறக்கணித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்தே அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் அம்பாறை மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களான பிரதி அமைச்சர்கள் பைசல் காசிம், எச்.எம்.எம்.ஹரீஸ் மற்றும் எம்.ஐ.எம்.மன்சூர் ஆகியோர் கூட்டாக இவ்விடயத்தை பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

இதன்போது தென்கிழக்கு பல்கலைகழகத்தின் பொறியியல் பீடம் ஒருபோதும் மூடப்பட மாட்டாது எனவும், குறித்த பிரச்சினை சுமூகமாக தீர்த்து வைக்கப்படும் எனவும், அங்கு நிலவும் குறைபாடுகள் அனைத்தும் நிவர்த்தி செய்யப்பட்டு சகல வசதிகளும் கொண்டதாக அபிவிருத்தி செய்து தரப்படும் எனவும் பிரதமர் உறுதியளித்துள்ளதாக  பிரதி அமைச்சர் பைசல் காசிம் மேலும் தெரிவித்தார்