தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்காத இஸ்லாமிய குடும்பம் வலுக்கட்டாயமாக வெளியேற்றம் (Video)

தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்காத இஸ்லாமிய குடும்பம் வலுக்கட்டாயமாக வெளியேற்றம் (Video)

சினிமா திரையரங்கில் இந்திய தேசிய கீதம் ஒலிபரப்பப்பட்ட போது, எழுந்து நிற்காத இஸ்லாமிய குடும்பத்தை, அங்கிருந்தவர்கள் திரையரங்கை விட்டு வெளியேற்றிய சம்பவம் நாடு முழுக்க பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது  தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.

மும்பையில் குர்லா பகுதியில் உள்ள ஒரு திரையரங்கில், நேற்று திரைப்படம் ஒளிபரப்பப்படுவதற்கு முன்பாக இந்திய தேசிய கீதம் ஒளிபரப்பப்பட்டது.அப்போது அனைவரும் எழுந்து நின்ற வேளையில்,ஒருவர் மாத்திரம் இருக்கையிலேயே அமர்ந்திருந்தார். அவரை எழுந்து நிற்குமாறு,அங்கு கூடியிருந்த சிலர் கூறியுள்ளனர்.அதற்கு மறுப்பு தெரிவித்த அவர், எழுந்து நிற்க வேண்டிய அவசியம் தனக்கு இல்லை எனக் கூறியுள்ளார். பின்னர் அங்கிருந்தவர்கள் தொடர்ந்து அச்சுறுத்தியதால், தன் முழங்காலில் அடி பட்டுள்ளதால் தன்னால் எழுந்து நிற்க முடியாது எனக் கூறியுள்ளார்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சில மக்கள், அவரை சினிமா திரையரங்கை விட்டு செல்லுமாறு கூச்சல் போட்டனர். இதற்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்த இஸ்லாமிய தம்பதியினர், ஒருகட்டத்தில், கூட்டத்தினரின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி, திரையரங்கை விட்டு வெளியேறினர். அவர்கள் வெளியேறிய பின்னரே அத்திரையரங்கில் சினிமா போடப்பட்டுள்ளது. அவருக்கும் அங்கு கூடியிருந்தவர்களுக்கும் இடையே நடந்த வாக்குவாதத்தை சிலர் வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளம் வாயிலாக வெளியிட்டுள்ளனர்.

படம் பார்க்க வந்தவர்களை, அச்சுறுத்தி, திரையரங்கத்தை விட்டு வெளியேற்றிய இந்த சம்பவத்தை சமூக ஆர்வலர்கள் வன்மையாகக் கண்டித்துள்ளனர்.

இந்நிலையில், டெல்லியைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞரான இக்பால் சக்லா உள்ளிட்ட பலர், இது சட்டத்திற்கு புறம்பானது இல்லையென்றும், தேசிய கீத அவமரியாதை சட்டம் 1971-ன் படி, தேசிய கீதம் பாடவிடாமல் இடையூறு செய்வதுதான் குற்றமென்றும், தேசிய கீதத்திற்காக எழுந்து நிற்காதது குற்றம் என்று எந்த சட்டத்திலும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தின் வீடியோ;

[youtube url=”https://www.youtube.com/watch?v=cnlsiBbOiTs” width=”560″ height=”315″]