கரிம சீனி உற்பத்திக்கு தயாராகும் அரசாங்கம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு)
கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி லங்கா சீனி கம்பனிக்கு சொந்தமான பெல்வத்த மற்றும் செவனகல சீனி தொழிற்சாலைகளுக்கு நேற்று (03) கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது, இத்தொழிற்சாலைகளில் தற்போதுள்ள சுற்றுலா பங்களாக்களை பயன்படுத்தி Eco Tourism மேம்படுத்துவது மற்றும் இலங்கையில் சட்டவிரோத மதுபான பாவனையை குறைப்பதற்கான தீர்வாக, இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் சீனியின் பிரதான உப உற்பத்தியான எத்தனோலைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யக்கூடிய குறைந்த விலை மற்றும் உயர்தர மதுபானங்களை சந்தைக்கு அறிமுகப்படுத்துவது குறித்தும் அமைச்சர் ஆராய்ந்தார்.
அதேபோல், கரிம உரம் மற்றும் ஏற்றுமதி சந்தையை இலக்காகக் கொண்டு கரிம சீனி உற்பத்தி தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும், சீனி உற்பத்தியை விநியோகிப்பதற்கான முறையான விநியோக வலையமைப்பை உருவாக்குவது மற்றும் தொழிலாளர்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்க வேலை சுட்டெண்ணை தயாரிப்பது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
அதேபோல், இந்த கண்காணிப்பு பயணத்தில், விவசாயிகள் நீரைப் பெறுவதில் எதிர்நோக்கும் சிரமங்களைக் குறைக்கும் வகையில் கால்வாய்களை புனரமைக்க நீர்ப்பாசன அமைச்சுடன் இணைந்து துரித நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து அமைச்சர் கவனம் செலுத்தியுள்ளார்.