போலி ஆவணங்களைத் தயாரித்த மூன்று பேர் கைது

போலி ஆவணங்களைத் தயாரித்த மூன்று பேர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  மோசடியாக தயாரிக்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் பிற வாகன உரிமங்களை தயாரித்து பணம் பெறும் மோசடியில் ஈடுபட்டு வந்த ஒருவரை பொலன்னறுவை  குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நேற்று (10) மேற்கொண்ட சுற்றிவளைப்பில் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் மனம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, ​​அவரிடம் இருந்து 19 போலி சாரதி அனுமதிப்பத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

சாரதி அனுமதிப்பத்திரங்கள் மற்றும் வாகனப் பதிவு சான்றிதழ்களை தயாரிப்பது தொடர்பிலும் குறித்த நபர் மேலும் பல அதிர்ச்சி தகவல்களை பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.

கிடைத்த தகவல்களின் அடிப்படையில், வேரஹெர மோட்டார் வாகன சாரதி அனுமதிப்பத்திர அலுவலகம் அருகே சாரதி பயிற்சி பாடசாலை நடத்தும் ஒருவரையும், நாரஹேன்பிட்ட மோட்டார் வாகன சாரதி அனுமதிப்பத்திர அலுவலகம் அருகே போலி உரிமங்களைத் தயாரித்த ஒருவரையும் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 39 மற்றும் 60 வயதுடைய பொரலஸ்கமுவ மற்றும் நாரஹேன்பிட்ட பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த சந்தேகநபர்களிடமிருந்து மூன்று போலி சாரதி அனுமதிப்பத்திரங்கள், ஆறு கைப்பேசிகள், ஒரு கணினி மற்றும் இதற்காகப் பயன்படுத்தப்பட்ட பல ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.

சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக மனம்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

பொலன்னறுவை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் மனம்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

COMMENTS

Wordpress (0)