
சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல்; மரைக்காயர் பதவியை இராஜினாமா செய்தார் வை. அஹமட்லெவ்வை
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசலுக்கு இடைக்கால நிருவாக மரைக்காயர் சபைக்கு பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா அவர்களின் சிபாரிசின் பெயரில் வழங்கப்பட்ட மரைக்காயர் பதவியை இராஜினாமா செய்வதாக ஓய்வு பெற்ற கூட்டுறவு பொது முகாமையாளர் வை. அஹமட்லெவ்வை தெரிவித்தார்.
தனது இராஜினாமா குறித்து முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் மற்றும் சாய்ந்தமருது பிரதேச செயலகம் ஆகியவற்றுக்கும் பிரதிகள் அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலுக்கு பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவாவினால் இடைக்கால நிர்வாக சபை சிபாரிசு செய்யப்பட்டு, அதில் 42 பேர் கொண்ட குழு தெரிவு செய்யப்பட்டது. அதில் ஒருவராகத் தெரிவு செய்யப்பட்ட ஓய்வு பெற்ற கூட்டுறவு பொது முகாமையாளர் வை. அஹமட்லெவ்வை என்பவரே தனது இராஜினாமாவை அறிவித்துள்ளார்.
அவர் அனுப்பி வைத்துள்ள இராஜினாமா கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
அல்-ஹாஜ் வை. அஹமட்லெவ்வை
ஓய்வுபெற்ற பொது முகாமையாளர். (கூட்டுறவு)
G.M.M.S. வீதி, சாய்ந்தமருது -11
கௌரவத் தலைவர் அவர்களுக்கு. ஜும்ஆ பெரிய பள்ளிவாசல், இடைக்கால நிருவாக சபை,
அன்புடையீர்
அஸ்ஸலாமு அலைக்கும்
சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசலுக்கு இடைக்கால நிருவாக மரைக்காயர் சபைக்கு பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா அவர்களின் சிபாரிசின் பெயரில் எனக்கு வழங்கப்பட்ட மரைக்காயர் பதவியை இராஜினாமா செய்கின்றேன்.
மேற்படி பள்ளிவாசலுக்கு இடைக்கால பள்ளிவாசல் நிருவாக சபையை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா அபூபக்கர் அவர்கள் எனது பெயரையும் தெரிவு செய்து நியமனம் வழங்கியமைக்கு எனது மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
ஆகவே, அரசியல்வாதியின் சிபாரிசின் பெயரில் பள்ளிவாசல் இடைக்கால நிருவாக சபையில் தொடர்ந்தும் இருக்கும் எண்ணம் எனக்கு இல்லை. சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் பொதுமக்களின் ஒரு சொத்து அரசியல்வாதிகளின் சொத்தல்ல. பிரதான ஜும்ஆ பள்ளிவாசலுக்கு கீழ் இயங்கும் 14 உப பள்ளிவாசல்களின் மஹல்லாவாசிகளை கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக நிர்வாக சபை ஒன்றை பாராளுமன்ற உறுப்பினர் நியமனம் செய்தது எனக்கும் பெரும்பாலான பொதுமக்களுக்கும் மனவேதனையை உண்டாக்கியுள்ளது.
பதவியை இராஜினமா செய்வதற்கு என்னை மன்னிக்கவும்.
இவ்வண்ணம்
அல்ஹாஜ் வை. அஹமட்லெவ்வை
பிரதிகள் :
* பணிப்பாளர், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் (வக்புசபை, பள்ளிவாசல் பரிபாலனம்)
எம்.எம். ஆசிக்,
பிரதேச செயலாளர், பிரதேச செயலகம், சாய்ந்தமருது.
என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அவரது இராஜினாமா கடிதம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.