புதினுக்கு துருக்கி அதிபர் அதிரடி சவால்

புதினுக்கு துருக்கி அதிபர் அதிரடி சவால்

 

உள்நாட்டு கிளர்ச்சியை சந்தித்து வருகிற சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு ஆதரவான நிலையை ரஷிய அதிபர் புதின் எடுத்துள்ளார். ஆனால் பஷார் அல் ஆசாத்துக்கு எதிரான நிலையை துருக்கி எடுத்துள்ளது.

இந்நிலையில் கடந்த 24ம் திகதி ரஷியாவின் போர் விமானம் ஒன்றை துருக்கியின் ‘எப்-16’ ரக போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தின. அந்த விமானம், தங்கள் வான் எல்லையில் அத்துமீறி பறந்ததாகவும், தாங்கள் விடுத்த எச்சரிக்கையை மீறி பறந்ததால் சுட்டு வீழ்த்தியதாகவும் துருக்கி கூறுகிறது. அதை அமெரிக்காவும் ஆதரிக்கிறது.

இதுபற்றி அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் எலிசபெத் டுருடியூ கருத்து தெரிவிக்கையில், “துருக்கியின் ஆதாரங்கள், எங்களது சொந்த தகவல்கள் யாவுமே, ரஷிய விமானம், துருக்கியின் வான் எல்லையில் அத்துமீறி பிரவேசித்ததால்தான் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கிறது என்பதையே கூறுகின்றன. தனது வான்செயல்பாடுகள் பற்றி அமெரிக்காவிடமோ, அதன் நட்புநாடுகளிடமோ ரஷியா தகவல் ஏதும் கூறவில்லை” என கூறினார்.

ஆனால் ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடனான எண்ணெய் வர்த்தகத்தை காத்துக்கொள்வதற்காகத்தான் தங்களது போர் விமானத்தை துருக்கி சுட்டு வீழ்த்தி உள்ளது என ரஷிய அதிபர் புதின் குற்றம் சாட்டி உள்ளார். அத்துடன் துருக்கிக்கு எதிராக பொருளாதார தடையும் விதித்துள்ளார்.

இதை துருக்கி அதிபர் ரெசெப் தாயிப் எர்டோகன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். பாரீஸ் பருவநிலை மாற்ற உச்சிமாநாட்டின் இடையே அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நீங்கள் (புதின்) ஏதாவது ஒரு புகாரை கூறினால், அதை நீங்கள் நிரூபிக்க வேண்டும். உங்கள் புகாருக்கு உங்களிடம் ஆதாரம் இருக்கிறதா? அப்படி ஆதாரம் இருந்தால் அதை மேஜை மீது வையுங்கள். நாங்கள் அதைப்பார்க்கிறோம்.

அப்படி நீங்கள் உங்கள் புகாரை நிரூபித்து விட்டால், உடனே நான் பதவி விலகுகிறேன். அப்படி நிரூபிக்கத்தவறினால், நீங்கள் பதவி விலகத்தயாரா?

நாங்கள் எங்கிருந்து சட்டப்பூர்வமாக எண்ணெய் வாங்குகிறோம், இயற்கை எரிவாயு வாங்குகிறோம் என்பது வெளிப்படையானது. தீவிரவாத அமைப்புகளுடன் அப்படி வர்த்தகம் செய்யக்கூடிய அளவுக்கு நாங்கள் மானக்கேடானவர்கள் அல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.