
இஷாரா தொடர்பில் பொய்யான தகவல்களை வழங்கிய நபருக்கு நேர்ந்த கதி
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு தொடர்பாக தேடப்படும் பிரதான சந்தேகநபரான இஷார செவ்வந்தி குறித்து தவறான தகவல்களை வழங்கிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
திக்வெல்ல பிரதேசத்தை சேர்ந்த லஹிரு சம்பத் என்ற சந்தேகநபரை இவ்வாறு விளக்கமறியலில் தடுத்து வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சமர்ப்பணங்களை முன்வைத்த கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகள், கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட வேண்டிய இஷாரா செவ்வந்தி என்ற சந்தேகநபரைப் பற்றிய பொய்யான தகவல்களை இந்த சந்தேகநபர் தனது தொலைபேசி மூலம் பொலிஸாருக்கு அனுப்பி வைத்ததாக தெரிவித்தனர்.
இதன் மூலம் அவர் பொலிஸ் விசாரணைகளை தவறாக வழிநடத்த முயற்சித்ததாகவும் கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை ஆராய்ந்த கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுணவல, குறித்த சந்தேகநபரை எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் தடுத்து வைக்க உத்தரவிட்டார்.