
பாதிரியார் ஜோன் ஜெபராஜ் கேரளாவில் கைது
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தமிழ்நாட்டின் கோயம்புத்தூரைச் சேர்ந்த பாதிரியார் டி. ஜோன் ஜெபராஜ் (37), இரண்டு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கேரளாவின் மூணாறு பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோயம்புத்தூரை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் “கிங்ஸ் ஜெனரேஷன் பிரேயர் ஹால்” என்ற தேவாலயத்தின் பாதிரியாராக ஜெபராஜ் பணியாற்றி வந்தார்.
கடந்த ஆண்டு மே 21 ஆம் திகதி, கோயம்புத்தூரில் உள்ள ஜி.என். மில்ஸ் பகுதியில் உள்ள அவரது வீட்டில் நடந்த ஒரு பார்ட்டியின்போது, 17 மற்றும் 14 வயதுடைய இரண்டு சிறுமிகளை ஜெபராஜ் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது.
இந்த சம்பவம் 11 மாதங்களாக வெளியில் தெரியவில்லை. ஆனால், சமீபத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிகளில் ஒருவர் தனது உறவினரிடம் இதைப் பற்றி தெரிவித்ததை அடுத்து, முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (POCSO) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கோயம்புத்தூர் மத்திய அனைத்து மகளிர் பொலிஸ் நிலையம், ஜெபராஜை கைது செய்ய பல மாதங்களாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தது.
அவர் நாட்டை விட்டு தப்பியோடுவதை தடுக்க லுக்அவுட் நோட்டீஸும் வெளியிடப்பட்டிருந்தது. இறுதியாக, இன்ஸ்பெக்டர் அர்ஜுன் குமார் தலைமையிலான ஒரு சிறப்பு குழு, மூணாறு பகுதியில் அவரை கண்டுபிடித்து நேற்று 12 ஆம் திகதி இரவு கைது செய்தது.
கைது செய்யப்பட்ட ஜெபராஜ், ஏப்ரல் 13 ஆம் திகதி அதிகாலையில் கோயம்புத்தூரில் உள்ள காட்டூர் அனைத்து மகளிர் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார். அவர் விரைவில் POCSO சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஆர். நந்தினிதேவி முன்பு ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
ஜெபராஜ், கிறிஸ்தவ இசை நிகழ்ச்சிகளை நடத்துபவராகவும், சமூக ஊடகங்களில் பெரும் பின்தொடர்பு கொண்டவராகவும் அறியப்படுகிறார். இவர் சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த அவர், தனது மனைவியிடமிருந்து பிரிந்து வாழும் நிலையில், அவரது சதியால் இந்த புகார்கள் எழுப்பப்பட்டதாக கூறியுள்ளார்.
இந்த சம்பவம் கோயம்புத்தூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதுபோன்ற சம்பவங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.