
அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்த சஜித்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு முன்னுரிமை அளிப்பதாக உறுதியளித்த அரசாங்கம், டீசல் மற்றும் அனல் மின் நிலைய மாபியாக்களுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், மின்சாரத்தை அதிக விலைக்கு மக்களுக்கு விற்க அனுமதிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டினார்.
நீர்கொழும்பு பல்லன்சேனவில் நடந்த மக்கள் சந்திப்பில், அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து அவர் இதனை தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை பாதுகாக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது உறுதியளித்தார்.
வைத்தியசாலைகளில் அத்தியாவசிய மருந்துகள் இல்லாததால், மக்கள் தனியார் மருந்தகங்களில் உயிர்காக்கும் மருந்துகளை வாங்க வேண்டிய நிலை உள்ளதாகவும், இலவச மருத்துவம் என்ற மனித உரிமை மீறப்படுவதாகவும் கூறினார்.
மக்களின் வருமானம் குறைந்து, வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளதால் வறுமை அதிகரிப்பதாகவும், கல்வி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஜே.வி.பி. தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாகவும், அரச ஊழியர்களுக்கு ரூ.20,000 சம்பள உயர்வு மற்றும் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை சம்பள உயர்வு உள்ளிட்ட உறுதிமொழிகள் பொய்யாகி விட்டதாகவும் குற்றஞ்சாட்டினார்.
மக்கள் தெளிவான ஆணையை வழங்கியும், அரசாங்கம் கடந்த காலத்தின் மீது பழி சுமத்தி, திறமையின்மையை மறைத்து மக்களை ஏமாற்றுவதாகவும், எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் இதற்கு ஜனநாயக வழியில் பாடம் புகட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.