ஓய்வுகால நிதியத் துறையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் ஊழியர் சேமலாப நிதியம்

ஓய்வுகால நிதியத் துறையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் ஊழியர் சேமலாப நிதியம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஊழியர் சேமலாப நிதியம் ஓய்வுகால நிதியத்துறையில் தொடர்ந்தும் ஆதிக்கம் செலுத்தி 2024இன் இறுதியில் அத்துறையின் மொத்த சொத்துக்களில் 81.0 சதவீதத்தினை கொண்டுள்ளது.

ஊழியர் சேமலாப நிதியத்தின் தேறிய பெறுமதி 2023 இறுதியில் பதிவு செய்யப்பட்ட ரூ.3,886.7 பில்லியனிலிருந்து 2024 இறுதியில் ரூ.4,375.7 பில்லியனுக்கு ஆண்டிற்காண்டு அடிப்படையில் 12.6 சதவீதத்தினால் குறிப்பிடத்தக்களவிற்கு அதிகரித்தது.

நிதியத்தில் ஏற்பட்ட இவ்வளர்ச்சிக்கு முதலீடுகளூடாக உருவாக்கப்பட்ட வருமானமும் 2024இல் செய்யப்பட்ட நேர்க்கணியமான தேறிய பங்களிப்புகளும் முக்கிய காரணங்களாக அமைந்தன.

இச்சமகாலத்தில் உறுப்பினர்களுக்கான மொத்தப் பொறுப்புக்களு் இக்காலப்பகுதியில் 12.4 சதவீதத்தினால் அதிகரித்தன. 2024ஆம் ஆண்டிற்காக பெறப்பட்ட மொத்தப் பங்களிப்புக்கள் 11.3 சதவீதத்தினால் ரூ.234.4 பில்லியனுக்கு அதிகரித்த வேளையில் உறுப்பினர்களுக்கும் அவர்களது சட்டபூர்வ வாரிசுகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்ட மீளளிப்பின் மொத்தத் தொகை ரூ.188.1 பில்லியனுக்கு 12.9 சதவீதத்தினால் குறைவடைந்தது.

நிதியத்தின் தேறிய பங்களிப்பானது 2023இல் அறிக்கையிடப்பட்ட ரூ.5.3 பில்லியன் கொண்ட ஓர் எதிர்மறையான பங்களிப்புடன் ஒப்பிடுகையில் 2024இல் ரூ.46.3 பில்லியன் கொண்ட ஒரு நேர்க்கணிய பங்களிப்பை பதிவு செய்தது.

நிதியத்தின் மொத்த முதலீட்டு வருமானம் 2024இல் ரூ.513.8 பில்லியனாக காணப்பட்டதோடு, 2023இன் ரூ.481.1 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 6.8 சதவீதம் கொண்ட குறிப்பிடத்தக்க அதிகரிப்பினை பதிவு செய்தது.

நிதியத்திற்கான வருமானத்தின் ஆதிக்கம் பெற்ற மூலமாக வட்டி வருமானம் தொடர்ந்தும் விளங்கி 2023இன் ரூ.442.4 பில்லியனிலிருந்து 2024இல் ரூ.455.1 பில்லியனுக்கும் 2.9 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்தது.

பங்கிலாப வருமானம் 2023இன் ரூ.3.0 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2024இன் ரூ.5.5 பில்லியனுக்கு 82.9 சதவீதம் அதிகரிப்பினை காட்டியது.

பட்டியலிடப்பட்ட பங்குரிமை முதலீட்டின் மீதான தேறிய உண்மைப் பெறுமதியிலான இலாபம் 2023இன் ரூ.23.8 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2024ஆம் ஆண்டில் ரூ.49.2 பில்லியனை பதிவு செய்தது.

நிதியம், மொத்த வருமானத்திற்கான தொழிற்பாட்டு செலவினத்தை 2024இல் 0.6 சதவீத்தில் பேணியது. இருப்பினும் கூட, நிதியத்தின் வரிச்செலவினம் ரூ.64.1 பில்லியனுக்கு அதிகரித்தமைக்கு 2024 காலப்பகுதியில் அதிகரித்த முதலீட்டு வருமானமே காரணமாகும். மத்திய வங்கியின் ஆளுகைச் சபை தொழில் துறைக்குப் பொறுப்பான மாண்புமிகு அமைச்சரினதும் நிதித் துறைக்கு பொறுப்பான மாண்புமிகு அமைச்சரினதும் ஒப்புதலை பெறுவதற்கு உட்பட்டு, 2024இற்கான உறுப்பினர் நிலுவைகளின் மீது 11.00 சதவீதம் கொண்ட வட்டியைச் செலுத்த ஒப்புதலளித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட 2024 ஆண்டு பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

COMMENTS

Wordpress (0)