சீபா உடன்படிக்கைக்கு மாற்றீடாக எட்கா உடன்படிக்கை விரைவில் கைச்சாத்து

சீபா உடன்படிக்கைக்கு மாற்றீடாக எட்கா உடன்படிக்கை விரைவில் கைச்சாத்து

இந்தியாவுடன் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப கூட்டு உடன்படிக்கையை செய்துகொள்வது தொடர்பில் இறுதித்தீர்மானம் மேற்கொள்வற்காக சர்வதேச வர்த்தக அமைச்சின் குழு ஒன்று எதிர்வரும் 21ஆம் திகதியன்று இந்தியாவுக்கு செல்லவுள்ளது.

இதனையடுத்து 22 ஆம் திகதியன்று இறுதித்தீர்மானம் அறிவிக்கப்படவுள்ளதாக அரச மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று சர்வதேச வர்த்தகத்துறை அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த விடயம் வெளியிடப்பட்டதாக சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

அரச மருத்துவர் சங்கம் இந்தியாவுடனான இந்த உடன்படிக்கையை தொடர்ந்தும் எதிர்த்து வருகிறது.

ஏற்கனவே சீபா என்ற திட்டத்துக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டமையால் தற்போது அது (ETCA) என்று மாற்றம் பெற்றுள்ளது.

இந்நிலையில் குறித்த உடன்படிக்கையின் கீழ், இந்தியாவில் தொழிலற்றுள்ள தொழில்சார் துறையினர் இலங்கைக்குள் அனுமதிப்பதை தாம் ஏற்றுக்கொள்ளமுடியாது என்றும் அரச மருத்துவர் சங்கம் இந்தக் குறித்த சந்திப்பின்போது தெரிவித்தாக சங்கத்தின் செயலாளர் வைத்திய அதிகாரி அலுத்கே தெரிவித்துள்ளார்.

எனினும் இலங்கையில் உள்ள தொழில்சார் துறையினரின் திறமைகளை சர்வதேச மட்டத்துக்கு உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதை தாம் வலியுறுத்துவதாகவும் தாம், அமைச்சரிடம் எடுத்துரைத்ததாக அலுத்கே மேலும் குறிப்பிட்டுள்ளார்.