ரிஷாதிற்காக மட்டுமின்றி ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்காய் கையேந்துங்கள்

ரிஷாதிற்காக மட்டுமின்றி ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்காய் கையேந்துங்கள்

கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மற்றும் மாத்தறை பாஹியன்கல ஆனந்த சாகர தேரர் ஆகியோருக்கிடையில் பகிரங்க விவாதமொன்று இன்று திங்கட்கிழமை(28) தனியார் தொலைக்காட்சியான “ஹிரு” தொலைக்காட்சியின் “சலகுன” என்னும் நிகழ்ச்சியினூடாக நடைபெற உள்ளது.

குறித்த விவாதமானது வில்பத்து காடழிப்பு விவகாரம் தொடர்பில் தன் மீது சுமத்தப்பட்ட அவதூறுகளுக்கு தக்க பதிலினை அளிக்கும் வகையிலேயே அமைச்சர் ரிஷாத் இன்று(28) விவாதிக்க உள்ளார்.

வில்பத்து காட்டில் காடழிப்பினை ஏற்படுத்தி வனராசிகளை அழித்து முஸ்லிம்களை குடியேற்றும் செயற்பாடுகளில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் செயற்பட்டு வருவதாகவும் வில்பத்துக் காட்டினை மையமாக வைத்து கொழும்பு மற்றும் பல பிரதேசங்களுக்கு சகாக்களை வைத்து போதைப்பொருள் வியாபாரத்தினை மேற்கொண்டு வருவதாகவும் கடந்த சனியன்று விகாரமகாதேவிப் பூங்காவிற்கு முன்னாள் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் குறித்த தேரரான மாத்தறை பாஹியங்கல ஆனந்த தேரேர் ஊடகங்களுக்கு பகிரங்கமாய் அரை கூவியிருந்தார்.

இதனையடுத்து அமைச்சர் ரிஷாத் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு புதனன்று CWE கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. குறித்த மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் கடந்த காலங்களில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையின் விளைவாலேயே அப்பாவி மக்கள் வெளியேறி இருந்ததாகவும் சமாதான சூழலினை அடுத்து தாம் பூர்வீகமாக வாழ்ந்த இடங்களில் பிரதேச செயலாளர்களின் உரிய பரிசீலனைகளுக்கு பின்னர் அம்மக்கள் மீள் குடியேறுவதற்கு முற்படும் போது அரசியல் குரோதப் போக்குடையோரும் இனவாதத் தரப்பினரும் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தன்மீது அவதூறுகளை முன்வைத்து சேறுபூச இவ்வாறான பரப்புரைகளை கடந்த காலம் தொட்டும் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதோடு, சிலசில ஊடகங்களும் இதற்கு துணைபோயிருந்தமை பெரும் வருத்தமளிக்கின்றது எனவும் குறிப்பிட்டார்.

மேலும் குறிப்பாக ஆனந்த தேரர் முற்றிலும் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை முன்வைப்பதாகவும் தன் மீதான குற்றச்சாட்டை முடியுமானால் சாட்சியங்களுடன் நிரூபிக்குமாறும், இதுகுறித்து பகிரங்க விவாதத்திற்கு தான் தயார் எனவும் அறிவித்திருந்தார். இப்பகிரங்க விவாதத்திற்கு நான்கு தொலைக்காட்சி சேவைகள் போட்டி போட்டு முன்வந்த நிலையில் ஆனந்த தேரர் தான் “ஹிரு” தொலைக்காட்சியில் மாத்திரமே விவாதிக்கத் தயாராக உள்ளேன் எனவும் அறிவித்திருந்தார். இதற்கு அமைச்சரும் குறித்த தொலைகாட்சி சேவையில் விவாதிக்க இணங்கியுள்ளார்.

மேலும், அமைச்சர் ரிஷாத் பிறந்த பூர்வீகம்,அவரது பிரதேசம் இவற்றிலும் மேலாக அவர் ஓர் அமைச்சர் என்ற வகையில் வடபுல முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தில் அக்கறை செலுத்துவது அவரது கடமையும் பொறுப்பும் கூடவே.

அமைச்சர் ரிஷாத் சட்டத்தை மீறியோ, சட்டத்தை கையிலெடுத்தோ செயற்படவில்லை.அதற்கான ஆதாரங்கள் நிறையவே உள்ளன.

ஆனால், இன்று உண்மைகள் குழிதோண்டி புதைக்கப்பட்டு இலங்கை திருநாட்டில் சிங்கள பெளத்தர்களில் அதிக எண்ணிக்கையானோர் இன்று முஸ்லிம் சமூகத்தை ஆக்கிரமிப்பாளர்களாகவே எண்ணுகின்றனர்.

இவாறானதொரு சூழ்நிலையிலேயே குறித்த தொலைகாட்சி விவாதம் இடம்பெற உள்ளது. இது சாதாரண தேர்தல் அரசியல் விவாதமாக அமையப்போவதில்லை. இலங்கை வாழ் ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களினதும் கௌரவங்களையும் உரிமைகளையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்புமிக்கதோர் சந்தர்ப்பமாக இச்சந்தர்ப்பம் வரலாற்றில் அமையப் போகின்றது.

அன்று தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் சோபித தேரருடன் தொலைக்காட்சியில் வாதம் புரிந்து வெற்றியடைந்தார். குறித்த வாதத்தின் இறுதியில் சிங்களவர்கள் வாயடைத்துப் போயிருந்தனர் என்பதனையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

அவ்வாறானதொரு இக்கட்டான நிலைமையினையே அமைச்சர் ரிஷாதும் இன்று(28) சந்திக்கவுள்ளார்.

குறித்த விவாதம் “வில்பத்து” குறித்து இருப்பினும் ஒட்டுமொத்த முஸ்லிம்களின் கௌரவமும்,தன்மானமும் அவ்விவாதத்தில் பொதிந்துள்ளது. அதனை காக்கும் பொறுப்பு அமைச்சரிடமே உள்ளது.

துணிச்சலாய் எதற்கும் எதிர்நீச்சல் போடும் அமைச்சர் ரிஷாதிடம் பெரும் குறையாய் இருப்பது, சிங்கள மொழியாற்றலே.. எவ்வாறாயினும், குறித்த நிகழ்ச்சியில் துணிச்சலாய் சக்தியுடன் விவாதிக்க இறைவனிடம் கையேந்துவோமாக.

இது அரசியல் போட்டியல்ல. கட்சி, அரசியல் பேதங்களின்றி நாம் அனைவரும் ஒரு சமூகத்திற்காய் ஒன்றிணைய வேண்டும். அமைச்சர் ரிஷாதின் உண்மை, ஆதாரபூர்வமான விவாதத்தன்மையும் அவர் அடையக் கூடிய வெற்றியும் முழு முஸ்லிம் சமூகத்திற்கும் மாபெரும் வெற்றியாகவே அமையும்.

(rizmira)