உள்ளூராட்சி மன்றங்களுக்கு எதிராக குவியும் முறைப்பாடுகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கு எதிராக குவியும் முறைப்பாடுகள்

உள்ளூராட்சி மன்றங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பில், ஊழல் மோசடி குறித்து ஆராயும் பிரிவுக்கு 98 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

கடந்த ஒக்டோபர் மாதம் முதல் நவம்பர் மாத இறுதிவரை குறித்த முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை இவற்றில் அதிகமான தொகையாக, மேல் மாகாண உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பில் 11 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.  இன்னும், குறைந்த தொகையாக சப்ரகமுவ மாகாணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அத்துடன் வட மாகாணம் குறித்து 5 முறைப்பாடுகளும் வட மத்திய, ஊவா, தென் மாகாணங்கள் குறித்து 4 முறைப்பாடுகளும் கிழக்கு மாகாணம் குறித்து 6 முறைப்பாடுகளும் மத்திய மாகாணம் குறித்து 8 முறைப்பாடுகளும் இவ்வாறு கிடைக்கப் பெற்றுள்ளன.

இதன்படி குறித்த முறைப்பாடுகள் யாவும் தற்போது மாகாண சபைகள் ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு, அந்த அறிக்கை அமைச்சருக்கு அனுப்பப்பட்டு, அதன் பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக அவற்றை இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு அல்லது பொலிஸாரிடம் ஒப்படைப்பது பற்றி, தீர்மானிக்கப்படும் என, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு மேலும் கூறியுள்ளது.

இதேவேளை, சில உள்ளூராட்சி மன்றங்களுக்கான கால எல்லையை நீடிப்பது குறித்த வர்த்தமானி அறிக்கை இன்று வௌியிடப்படவுள்ளதாக, அந்த அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது. 

இதன்படி கலைக்கப்படாத உள்ளூராட்சி மன்றங்களுக்கான கால எல்லை ஆறு மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. 

கொழும்பு மாநகர சபை, தெஹிவளை – கல்கிசை மாநகர சபை உள்ளிட்ட 23 உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலம் டிசம்பர் 31ம் திகதியுடன் நிறைவடைகின்றன. 

இந்நிலையில் இவற்றின் கால எல்லை ஜூன் 30ம் திகதி வரை நீடிக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.