ஈரான் நாட்டுடனான தொடர்புகளை அறுத்து எறியுங்கள் – சிரியா தேசிய கூட்டணி கட்சி

ஈரான் நாட்டுடனான தொடர்புகளை அறுத்து எறியுங்கள் – சிரியா தேசிய கூட்டணி கட்சி

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சியை ஈரான்,ரஷியா ஆகிய நாடுகள் வெளிப்படையாக ஆதரித்து வருகின்றன. இதனால், அந்நாட்டின் எதிர்க்கட்சியாக நாடு கடந்து துருக்கியில் இருந்து செயல்பட்டு வரும் சிரியா தேசிய கூட்டணி கட்சி ஈரானின் எதிரி நாடான சவூதி அரேபியாவை ஆதரித்து வருகின்றது.

சமீபத்தில் ஷியா பிரிவு தலைவர் நிம்ர் அல் நிம்ர் உட்பட 47 பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றிய சவூதி அரேபியா அரசின் நடவடிக்கைக்கு ஈரான் அதிபர் ஹஸன் ரவுஹானி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சவூதி அரசு தன்னுடைய பெயரினை உலக நாடுகளில் மட்டுமல்லாமல் இஸ்லாமிய நாடுகள் மத்தியிலும் கெடுத்து கொண்டது என்றும் ஈரான் அதிபர் விமர்சித்துள்ளார்.

இதையடுத்து, வர்த்தகம், போக்குவரத்து உட்பட ஈரானுடனான அனைத்துவகை தொடர்புகளையும் துண்டித்து கொண்டதாக சவூதி அரேபியா அறிவித்தது.

சன்னி பிரிவை சேர்ந்த மன்னர் சல்மானின் கீழ் நடந்துவரும் ஆட்சி மண்ணோடு மண்ணாகிப் போகும் என ஈரானில் உள்ள ஷியா தலைவர்கள் சபித்துவரும் நிலையில், ஈரான் நாட்டுடனான தொடர்புகளை அறுத்து எறியுங்கள் என சிரியாவின் முக்கிய எதிர்க்கட்சியான சிரியா தேசிய கூட்டணி கட்சி அரபு நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.