சவூதி அரேபியாவிற்கு பாதுகாப்பு வழங்க பாகிஸ்தான் உறுதி

சவூதி அரேபியாவிற்கு பாதுகாப்பு வழங்க பாகிஸ்தான் உறுதி

சவூதி அரேபியாவுக்கு ஆபத்து ஏற்பட்டால், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என பாகிஸ்தான் உறுதியளித்துள்ளது.

சவூதி அரேபியாவின் பாதுகாப்பு அமைச்சரும், துணைப்பட்டத்து இளவரசருமான முகமது பின் சல்மான் (Mohammed bin Salman) பாகிஸ்தானிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இவர் பாகிஸ்தான் இராணுவ தளபதி ஜெனரல் ரகீல் ஷரீவ்வை (Raheel Sharif ) நேற்று ஞாயிற்றுக்கிழமை சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது சவூதி அரேபியாவுக்கும் ஈரானுக்கும் இடையில் நிலவும் சர்ச்சை குறித்து பாகிஸ்தான் அக்கறை தெரிவித்ததுடன் சர்ச்சைக்குத் தீர்வுகாண, இரு நாடுகளுக்கு இடையிலும் பேச்சுவார்த்தையை முன்னெடுக்க பாகிஸ்தான் முன்வந்துள்ளது.

ஷியா முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த மதகுரு ஒருவருக்கு சவூதி அரேபியா மரண தண்டனையை நிறைவேற்றியதை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையேயான ராஜ்ய உறவுகள் மோசமடைந்துள்ளன. இதனையடுத்து சவூதி அரேபியாவின் பாதுகாப்பிற்கு பாகிஸ்தான் உத்தரவாதம் வழங்கியுள்ளது.

இதேவேளை, சவூதி அரேபியாவுக்கும் ஈரானுக்கும் இடையில் நிலவும் சர்ச்சை தொடர்ந்து பாகிஸ்தானிற்கு விஜயம் செய்துள்ள சவூதி அரேபியாவின் இரண்டாவது உயர் மட்ட அதிகாரி இவர் என்பதுடன், கடந்த வாரம் சவூதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சர் அடெல் அல் யுபியர் (Adel al-Jubeir) ரும் விஜயம் செய்தமை குறிப்பிடத்தக்கது.