முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஹசன் அலியும் இராஜினாமா?

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஹசன் அலியும் இராஜினாமா?

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஹசன் அலி பதவியை இராஜினாமா செய்யத் தீர்மானித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஏ.ஆர்.ஏ. ஹாபிஸ் பதவியை இராஜினாமா செய்ததன் காரணமாக ஏற்பட்ட வெற்றிடத்திற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கை நியமிக்க கட்சித் தலைமை எடுத்த தீர்மானத்திற்கு கட்சியின் பொதுச் செயலாளர் ஹசன் அலி எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு இரண்டு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகள் வழங்கப்பட்டன.

இந்த பதவிகளுக்காக கட்சியின் பொதுச் செயலாளர் ஹசன் அலியையும் கட்சிக்காக அர்ப்பணிப்பு செய்த ஒருவரையும் நியமிக்க கட்சியின் அதி உயர் பீடம் தீர்மானித்திருந்தது.

எனினும் பின்னர், பதவி விலகும் உறுதிமொழியின் அடிப்படையில் முதலில் குறித்த இரண்டு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்காக ஏ.ஆர்.ஏ ஹாபீஸ் மற்றும் ஏ.எல். சல்மான் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

முன்னதாக ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் ஏ.ஆர்.ஏ. ஹாபீஸ் பதவியை விலகிய போதிலும் அந்தப் பதவிக்கு தம்மை நியமிக்கவில்லை என ஹசன் அலி தெரிவித்துள்ளார்.

தம்மை நியமிக்காது எம்.எஸ்.தௌபீக்கை நியமித்தமைக்கு எதிர்ப்பை வெளியிட்டு பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாகவும் குறித்த சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.