இலங்கை திறந்த பல்கலைக்கழகம் வரையறையற்ற பணிப்பகிஷ்கரிப்பில்

இலங்கை திறந்த பல்கலைக்கழகம் வரையறையற்ற பணிப்பகிஷ்கரிப்பில்

தீர்வொன்று கிடைக்கும் வரை தங்களின் தொழிற்சங்க நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதாக இலங்கை திறந்த பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

நாவல திறந்த பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர்கள் நேற்று மாலை முதல் கால வரையறையற்ற பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

திறந்த பல்கலைக்கழக மாணவர்களினால் விடுக்கப்படும் அழுத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிபகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாவலயிலுள்ள இலங்கை திறந்த பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் அனைத்து கடமைகளில் இருந்தும் தற்போது விலகியுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக தொழிற்சங்க சம்மேளனத்தின் பிரதித் தலைவர் எம்.எம். விஜிதசேன குறிப்பிட்டார்.

திறந்த பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடும் கல்விசாரா ஊழியர்களுடன் மாணவர்கள் சிலர் வீணாக மோதிக்கொள்வதுடன், அந்த நடவடிக்கைகளுக்கும் பல்வேறு வழிகளில் இடையூறுகளை விளைவித்து வருவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு தொடர்ச்சியாக அறிவுறுத்தல் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் அவற்றை செவிமடுக்காமல் தொடர்ந்தும் அழுத்தும் விடுத்து வருவதாக அனைத்து பல்கலைக்கழக தொழிற்சங்க சம்மேளனத்தின் பிரதித் தலைவர் கூறினார்.

இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரையில் தங்களின் பணிபகிஷ்கரிப்பை தொடர்வதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, இந்த பணிபகிஷ்கரிப்பு நியாயமற்றதாகும் என திறந்த பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் அமில சந்தருவன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சர்ச்சை குறித்து திறந்த பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.ஏ. ஆரியதுரையிடம் வினவியபோது, நிலைமை குறித்து சம்பந்தப்பட்டவர்களுடன் எதிர்வரும் திங்கட்கிழமை கலந்துரையாடவுள்ளதாகவும் கூறினார்.